மெட்ரோ ரெயில் திட்டம்: சுரங்கம் தோண்டும் பணியை வெற்றிகரமாக முடித்த ‘மேலகிரி’ எந்திரம்

மெட்ரோ ரெயில் திட்டம் 2-வது கட்டத்தில் சுரங்கம் தோண்டும் பணியை ‘மேலகிரி’ எந்திரம் வெற்றிகரமாக முடித்தது.
சென்னை,
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், கட்டம் 2-ல் 118.9 கி.மீ. நீளத்திற்கு மேலும் 3 வழித்தடங்களை கட்டி முடிக்க திட்டமிட்டு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் கட்டம் 2 வழித்தடம் 3-ல் சுரங்கப்பாதை கட்டுமான பணிகளில், சுரங்கம் தோண்டும் இயந்திரம் ‘மேலகிரி’ அயனாவரம் நிலையத்திலிருந்து பெரம்பூர் நிலையம் வரையிலான 861 மீட்டர் நீளமுள்ள சுரங்கப்பாதை அமைக்கும் பணியை முடித்து பெரம்பூர் நிலையத்தை வந்தடைந்தது.
இது டாடா நிறுவனத்தின் TU02 ஒப்பந்தப் பிரிவில் எட்டாவது சுரங்கம் தோண்டும் இயந்திரத்தின் வெற்றிகரமான பணி நிறைவு ஆகும். சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் தனது இரண்டாம் கட்டத் திட்டத்தில் இதுவரை மொத்தம் 19 சுரங்கம் தோண்டும் பணிகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
சுரங்கம் தோண்டும் இயந்திரம் மேலகிரி, பெரம்பூர் இரயில் நிலைய தண்டவாளங்கள் மற்றும் நடைமேடைகளுக்கு அடியில், அதிக மக்கள் தொகை கொண்ட மற்றும் நெருக்கமான கட்டிடங்கள் நிறைந்த பகுதிகளுக்கு அடியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணியை வெற்றிகரமாக முடித்தது. சுரங்கப்பாதை அமையும் வழியில் இருந்த 32-க்கும் மேற்பட்ட ஆழ்துளைக் கிணறுகள் முறையாகக் கையாளப்பட்டன.
பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாத வகையில், அக்கிணறுகளுக்குப் பதிலாக மாற்று நீர் ஆதாரங்கள் மெட்ரோ நிர்வாகத்தால் வழங்கப்பட்டன. இந்நிகழ்வை சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், டாடா நிறுவனம் மற்றும் பொது ஆலோசகர் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தளத்தில் இருந்து பார்வையிட்டனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






