கோயம்பேடு - நந்தம்பாக்கம் இடையே 6 மாதத்தில் மெட்ரோ ரெயில் சேவை: அதிகாரிகள் தகவல்

பூந்தமல்லி- வடபழனி இடையிலான மெட்ரோ சேவை தொடங்கப்பட்டுள்ளது.
கோயம்பேடு - நந்தம்பாக்கம் இடையே 6 மாதத்தில் மெட்ரோ ரெயில் சேவை: அதிகாரிகள் தகவல்
Published on: 

சென்னை,

சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்தில், பூந்தமல்லி புறவழிச்சாலை - வடபழனி இடையிலான மெட்ரோ சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இவ்வழித்தடத்தில் 11 உயர்மட்ட ரெயில் நிலையங்கள் அமைந்துள்ளன.

நேற்று முன்தினம் மாலை 4 மணி முதல் பயணிகள் சேவை தொடங்கியது. முதல் நாளில் இரவு 9 மணி வரை இயக்கப்பட்ட மெட்ரோ ரெயில்களில் 25,474 பேர் பயணம் செய்தனர். நேற்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை இரு மார்க்கங்களிலும் ரெயில்கள் இயக்கப்பட்டன.

2-வது நாளில் சுமார் 55 ஆயிரம் பேர் பயணம் செய்தனர். இதன் மூலம் 2 நாட்களில் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ ரெயில் அதிகாரிகள் தெரிவித்தனர். அடுத்தகட்டமாக, மாதவரம் - சோழிங்கநல்லுார் வழித்தடத்தில், கோயம்பேடு - நந்தம்பாக்கம் வர்த்தக மையம் இடையே மெட்ரோ ரெயில் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-

சென்னையில் 47 கி.மீ. துாரமுள்ள மாதவரம்-சோழிங்கநல்லுார் தடத்தில் 46 ரெயில் நிலையங்கள் அமைகின்றன. இந்த தடத்தில் பெரும்பாலும், மேம்பால பாதையாக இருப்பதால் பணிகள் தாமதமின்றி நடந்து வருகின்றன.

மாதவரம், ரெட்டேரி, கொளத்துார், அண்ணா நகர், கோயம்பேடு, விருகம்பாக்கம்,போரூர், நந்தம்பாக்கம் வரை மேம்பாலத்தில் பாதைகள் அமைத்து தண்டவாளங்கள் அமைக்கும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.

கோயம்பேடு முதல் நந்தம்பாக்கம் வர்த்தக மையம் வரையிலான மெட்ரோ கட்டுமானத்தில் தற்போது 70 சதவீதம் பணிகள் முடிந்துள்ளன. அடுத்தகட்டமாக, இந்த தடத்தில் ஆறு மாதங்களில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com