கோயம்பேடு-அசோக்நகர் இடையே மெட்ரோ ரெயில் சேவை நிறுத்தம்

வருகிற 15-ந்தேதியில் இருந்து 19-ந்தேதி வரை மெட்ரோ ரெயில் சேவைகளில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் வடபழனி மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு மேலே நடந்து வரும் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் கட்டுமான பணிகளால், பச்சை வழித்தடத்தில் கோயம்பேடு முதல் அசோக் நகர் வரை மெட்ரோ ரெயில் சேவைகள் வருகிற 15-ந்தேதியில் இருந்து 19-ந்தேதி வரை தற்காலிகமாக மாற்றியமைக்கப்படுகிறது.
நீல வழித்தடத்தில் (விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரை அண்ணாசாலை டி.எம்.எஸ் வழியாக) இயக்கப்படும் சேவையில் நேரம் மற்றும் அட்டவணையில் எந்த மாற்றமும் இருக்காது.
ஆனால் பச்சை வழித்தடத்தில் மேற்கண்ட நாட்களில் காலை 5 மணி முதல் 6 மணி வரை பரங்கிமலையில் இருந்து அசோக் நகர் வரையிலும், விமான நிலையத்தில் இருந்து அசோக் நகர் வரையிலும் 14 நிமிட இடைவெளியில் ரெயில்கள் இயக்கப்படும். எம்.ஜி.ஆர். சென்டிரலில் இருந்து கோயம்பேடு வரை 7 நிமிட இடைவெளியில் ரெயில் சேவை நடக்கும்.
கோயம்பேடு முதல் அசோக் நகர் வரை 15-ந்தேதியில் இருந்து 19-ந்தேதி வரை காலை 5 மணி முதல் 6 மணி வரை தற்காலிகமாக சேவை நிறுத்தப்படுகிறது. பயணிகளின் வசதிக்காக கோயம்பேடு மற்றும் அசோக் நகர் இடையே காலை 5 மணி முதல் 6 மணி வரை 10 நிமிடங்களுக்கு ஒருமுறை சிறப்பு இணைப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. காலை 6 மணி முதல் மெட்ரோ ரெயில் சேவை வழக்கம் போல் தொடங்கும். வாரநாள், சனிக்கிழமை, ஞாயிறு கால அட்டவணை பின்பற்றப்படும்.
இந்த தற்காலிக மாற்றங்கள், 2-ம் கட்ட கட்டுமானப் பணிகள் சீராகவும், சரியான நேரத்திலும் நடப்பதற்கு அவசியமானவையாகிறது. பயணிகளின் சிரமத்துக்கு வருந்துகிறோம். பயணிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.






