பரந்தூர் விமான நகரமாக உருவாக இருப்பதால் மெட்ரோ ரெயில் நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டம்

பரந்தூர் விமான நகரமாக உருவாக இருப்பதால் அங்கு மெட்ரோ ரெயில் நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பரந்தூர் விமான நகரமாக உருவாக இருப்பதால் மெட்ரோ ரெயில் நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டம்
Published on

மெட்ரோ ரெயில்

சென்னையில் 54.1 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில் திட்டம் தற்போது செயல்பாட்டில் உள்ளது. இந்தநிலையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் பணிகள் ரூ.69 ஆயிரத்து 180 கோடி செலவில் 118.9 கிலோ மீட்டர் தூரத்துக்கு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகளை 2026-ம் ஆண்டுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

2-ம் கட்ட பணிகள் 3 வழித்தடங்களில் நடைபெற்று வருகிறது. 3-வது வழித்தடம் கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை 26.1 கிலோ மீட்டர் தூரத்துக்கு தியாகராயநகர், வடபழனி, போரூர் வழியாக நடைபெற்று வருகிறது.

இந்த வழித்தடத்தை சென்னையின் 2-வது விமான நிலையம் அமைய உள்ள பரந்தூர் வரை நீட்டிக்க மெட்ரோ ரெயில் நிறுவனம் சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

விமான நகரமாகும் பரந்தூர்

அதாவது பூந்தமல்லி, இருங்காட்டுக்கோட்டை, ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம் வழியாக 50 கிலோ மீட்டர் தூரத்துக்கு இந்த ரெயில் பாதை அமைக்கப்பட உள்ளது. சென்னை பரந்தூர் விமான நிலையம் அமைய உள்ள பகுதி பல்வேறு வசதிகளுடன் விமான நகரமாக உருவாக இருப்பதால், இதனை அடிப்படையாக கொண்டு பரந்தூர் விமான நிலைய பகுதியில் பல்வேறு மெட்ரோ ரெயில் நிலையங்களை அமைக்கும் வகையில் சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்க மெட்ரோ ரெயில் நிறுவனம் அறிவுறுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-

பூந்தமல்லி-பரந்தூர் இடையே 7 முதல் 10 கிலோ மீட்டர் இடைவெளியில் மெட்ரோ ரெயில் நிலையங்கள் அமைய உள்ளது. ஏற்கனவே இருந்து வரும் மெட்ரோ ரெயில் நிலையங்கள் 800 முதல் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளன.

பூந்தமல்லி-பரந்தூர் இடையே அதிக தொலைவில் மெட்ரோ ரெயில் நிலையங்கள் அமைப்பதன் மூலம் மெட்ரோ ரெயில்களை வேகமாக இயக்க முடியும். இதன்மூலம் பரந்தூரில் இருந்து தியாகராயநகர், வடபழனி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளுக்கு 2 மணி நேரத்துக்குள்ளாகவே வந்து விட முடியும்.

பரந்தூர் விமான நிலைய கட்டுமான பணிக்கான ஆலோசகர் தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழகத்தால் நியமிக்கப்பட்ட பிறகு பரந்தூரில் எதுவரை மெட்ரோ ரெயில் பாதையை கொண்டு செல்லலாம் என்பது குறித்து முடிவு செய்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com