

நீலகிரி,
தொடர் கனமழை எதிரொலியாக மேட்டுப்பாளையம் - குன்னூர் தண்டவாளத்தில் பாறைகள் சரிந்து விழுந்ததால் ஊட்டி மலை ரெயில் சேவை நிறுத்தப்பட்டது.
கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. பழமை வாய்ந்த மலை ரெயிலை கடந்த 2005-ம் ஆண்டு யுனெஸ்கோ நிறுவனம் உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ளது. உலக பிரசித்தி பெற்ற இந்த மலை ரெயிலில் பயணம் செய்து மலைப்பகுதியில் உள்ள இயற்கை எழில் காட்சிகளை கண்டு ரசிக்க தினமும் ஏராளமான வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.
தற்போது கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களில் கடந்த 4 நாட்களாக சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் கடந்த 2 நாட்களாக மேட்டுப்பாளையம் - குன்னூர் மலைப் பாதையில் பெய்த கனமழை காரணமாக கல்லாறு - ஹில் குரோவ், ஆடர்லி இடையே 2 இடங்களில் மண் மற்றும் பாறைகள் சரிந்து தண்டவாளத்தில் விழுந்தன. இதன் காரணமாக பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தில் இருந்து வழக்கம்போல் இன்று காலை 7.10 மணியளவில் 186 பயணிகளுடன் ஊட்டிக்கு மலை ரெயில் புறப்பட்டு சென்றது. அப்போது கல்லாறு ரெயில் நிலையத்தை தாண்டி ஹில் குரோவ் - அடர்லி ரெயில் நிலையங்கள் இடையே 2 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு தண்டவாளத்தில் சிறிய, பெரிய பாறைகள் மற்றும் மண்ணுடன் கலந்த சரளை கற்கள் சரிந்து விழுந்து தண்டவாளத்தை மூடியிருந்தன.
இதை பார்த்து உஷாரான என்ஜின் டிரைவர் ரெயிலை உடனடியாக நிறுத்தினார். இதன் காரணமாக மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்பட்ட மலை ரெயில் கல்லாறு ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. ரெயில் பாதையில் பெரிய கற்கள் உருண்டு விழுந்ததால் மேற்கொண்டு ரெயிலை குன்னூரை நோக்கி இயக்க முடியாததால் பாதி வழியில் கல்லாறு ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மலை ரெயில் மீண்டும் மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்திற்கு பின்னோக்கி இயக்கி கொண்டு வரப்பட்டது.
இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். பின்னர் ரெயிலில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தவர்களுக்கும் ரெயில் கவுண்ட்டரில் டிக்கெட் எடுத்தவர்களுக்கும் ரெயில்வே நிர்வாகம் அதற்கான தொகையை திருப்பி வழங்கியது.
இதையடுத்து ரெயில் தண்டவாளத்தில் பாறை மற்றும் மண் சரிந்து விழுந்ததால் இன்று ஒரு நாள் மேட்டுப்பாளையம் - குன்னூர் மலை ரெயில் ரத்து செய்யப்பட்டதாக சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் தெரிவித்தது. குன்னூர் மலை ரெயில் இருப்புப்பாதை என்ஜினீயர் தலைமையில் ரெயில்வே தொழிலாளர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து மலை ரெயில் பாதையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.