

மேட்டுப்பாளையம்,
தமிழக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தமிழகத்தில் உள்ள கோவில்கள் மற்றும் மடங்களை சேர்ந்த யானைகளுக்கு புத்துணர்வு அளிக்கும் வகையில் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் 10 ஆண்டுகளாக நடத்தப்பட்டது. 11-வது ஆண்டாக யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த தேக்கம்பட்டி பவானி ஆற்றுப்படுகையில் நேற்று தொடங்கியது.
நேற்றுமுன்தினம் 27 யானைகள் முகாம் நடக்கும் இடத்துக்கு கொண்டு வரப்பட்டன. முகாம் தொடக்க விழாவை முன்னிட்டு நேற்று காலையில் யானைகளை அதன் பாகன்கள் குளிப்பாட்டி, அலங்கரித்து வரிசையாக நிறுத்தி வைத்தனர்.
முகாமை அமைச்சர்கள் சேவூர் ராமச்சந்திரன், எஸ்.பி.வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். அணிவகுத்து நின்ற யானைகளுக்கு அமைச்சர்கள், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் கரும்பு, தர்ப்பூசணி, ஆப்பிள், வாழைப்பழம் ஆகியவற்றை வழங்கினர்.
முகாமில் கலந்து கொண்ட யானைகள் சக யானைகளை கண்ட மகிழ்ச்சியில் துதிக்கையால் அவற்றை அணைத்துக் கொண்டன. இந்த முகாம் அடுத்த மாதம் (ஜனவரி) 30-ந் தேதி வரை நடக்கிறது.
பின்னர் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறுகையில், தற்போது 27 யானைகள் வந்துவிட்டன. திருவனைக்காவல் கோவில் யானை ஓரிரு நாட்களில் முகாமுக்கு வந்து சேரும். இந்த முகாமுக்காக ரூ.1 கோடியே 47 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. யானைகள் குளிப்பதற்காக பவானி ஆற்றுப்படுகையில் ஷவர் அமைக்கப்பட்டு இருக்கிறது. காலை மற்றும் மாலை நேரத்தில் நடைபயிற்சி மேற்கொள்வதற்காக நடைபாதை வசதியும் செய்யப்பட்டு உள்ளது. முகாமில் யானைகளுக்கு மூலிகை மருந்துகள் கலந்த உணவுகளும் வழங்கப்படும் என்றார்.
முகாமுக்குள் காட்டு யானைகள் புகுவதை தடுக்க முகாமை சுற்றிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. கண்காணிப்பு கேமராக்கள், 8 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.