மேட்டூர் அணை ஜூன் 12-ல் திறப்பு இல்லை: கனவாகிப்போன குறுவை சாகுபடி - டெல்டா விவசாயிகள் கவலை

மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்கு இந்த ஆண்டு தண்ணீர் திறந்துவிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேட்டூர் அணை ஜூன் 12-ல் திறப்பு இல்லை: கனவாகிப்போன குறுவை சாகுபடி - டெல்டா விவசாயிகள் கவலை
Published on

மேட்டூர்,

"பருவத்தே பயிர் செய்" என்று பழமொழி ஒன்று சொல்வார்கள். அதாவது, 'சரியான பருவத்தில் விதைத்தால் தான் குறிப்பிட்ட காலத்தில் விளைச்சல் தரும்' என்பதே அதன் பொருள். அந்த வகையில், குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந் தேதி தண்ணீர் திறந்துவிடுவது வழக்கம்.

ஆனால், அந்த குறிப்பிட்ட காலக்கட்டத்தில் அணையின் நீர்மட்டம் 90 அடிக்கு குறையாமல் இருந்தால்தான் அது சாத்தியம். தற்போதைய சூழ்நிலையில், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 79 அடிக்கும் குறைவாகவே இருக்கிறது. இதனால், குறுவை சாகுபடிக்கு இந்த ஆண்டு தண்ணீர் திறந்துவிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், டெல்டா மாவட்ட விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

வரலாறு என்ன?

இந்த ஆண்டுதான் இதுபோன்று பிரச்சினையா?, இதற்கு முன்பு மேட்டூர் அணை உரிய காலத்தில் திறக்கப்பட்டதா?, அதன் வரலாறுதான் என்ன? என்பதை தொடர்ந்து பார்ப்போம்.

மழை காலங்களில் காவிரியில் பெருக்கெடுத்து ஓடிவரும் தண்ணீரை தேக்கிவைத்து, குடிநீர் மற்றும் பாசனத்திற்கு பயன்படுத்திக்கொள்வதற்காக, 1934-ம் ஆண்டு மேட்டூர் அணை கட்டப்பட்டது. 120 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணை, தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சாவூர் உள்ளிட்ட 13 டெல்டா மாவட்டங்களின் பாசனம் மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகிறது.

தண்ணீர் திறப்பு எப்போது?

அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந் தேதி காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. அணையின் நீர் இருப்பை பொறுத்து, ஜூன் மாதத்திற்கு முன்னதாகவோ அல்லது கால தாமதமாகவோ அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

இவ்வாறு திறக்கப்படும் தண்ணீர் ஜனவரி மாதத்துடன் நிறுத்தப்படும். அதன்பிறகு, பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை குடிநீர் தேவைக்காக மட்டும் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது.

மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு

கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை கேரளா மற்றும் கர்நாடக மாநிலத்தில் முன்கூட்டியே தொடங்கியது. இதனால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் மளமளவென்று உயர்ந்தது. கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

இவ்வாறு திறக்கப்பட்ட தண்ணீர் தமிழக - கர்நாடக எல்லை பகுதியான பிலிகுண்டுலுவை கடந்து தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு வந்து சேர்ந்தது.

கடந்த ஆண்டு குறித்த நேரத்தில் திறப்பு

கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் மேட்டூர் அணையின் நீர் இருப்பு திருப்திகரமாக இருந்ததால், காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் குறித்த நேரமான ஜூன் 12-ந் தேதி திறந்துவிடப்பட்டது.

அதே நேரத்தில், கர்நாடக அணைகளில் இருந்தும் தண்ணீர் வந்து கொண்டிருந்ததால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஜூன் 29-ந் தேதி முழு கொள்ளளவை எட்டியது. அணையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு உடனடியாக தண்ணீரும் திறக்கப்பட்டது.

93 ஆண்டு கால வரலாறு

மேட்டூர் அணை கட்டப்பட்டு 93 ஆண்டுகளான நிலையில், 44-வது ஆண்டாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் நிரம்பியது. பொதுவாக, ஜூலை, ஆகஸ்டு மாதங்களில்தான் மேட்டூர் அணை நிரம்பும். ஒரு சில ஆண்டுகள் ஆகஸ்டு மாதத்திற்கு பிறகும் மேட்டூர் அணை நிரம்பி இருக்கிறது.

அணை கட்டப்பட்ட காலத்தில் இருந்து 1957-ம் ஆண்டில் தான் முதன்முதலாக ஜூன் மாதத்திலேயே மேட்டூர் அணை நிரம்பியது. அடுத்து, 67 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த (2025) ஆண்டில்தான் ஜூன் மாதம் மேட்டூர் அணை நிரம்பியது குறிப்பிடத்தக்கது.

125.68 டி.எம்.சி. தண்ணீர் தேவை

தற்போது, குறுவை சாகுபடிக்கு நாமக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் 4 லட்சத்து 91 ஆயிரத்து 200 ஏக்கர் பாசன நிலங்களுக்கு 118.17 டி.எம்.சி. தண்ணீரும், கடலூர் மற்றும் அரியலூர் மாவட்டத்திற்கு 30 ஆயிரத்து 800 ஏக்கர் பாசன நிலங்களுக்கு 7.51 டி.எம்.சி. தண்ணீரும் மேட்டூர் அணையில் இருந்து தேவைப்படுகிறது.

இதுபோக, சம்பா மற்றும் தாளடி பாசனத்திற்கு செப்டம்பர் 15-ந் தேதி முதல் ஜனவரி 28-ந் தேதி வரை 12 லட்சத்து 10 ஆயிரம் ஏக்கர் பாசன நிலங்களுக்கு 268.47 டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படும்.

சம்பா, தாளடி சாகுபடி

தண்ணீர் தேவை இவ்வாறு இருக்க, மேட்டூர் அணையிலோ நீர் இருப்பு 79 அடிக்கும் குறைவாகவே இருக்கிறது. அதனால், இந்த ஆண்டு ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறுவை சாகுபடியும் பொய்த்து போய் உள்ளது.

இனி, கேரளா, கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்தால், காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இருக்கும். குறுவை பொய்த்தாலும், சம்பா, தாளடி சாகுபடிக்கு நீர் திறந்துவிட வாய்ப்பாக அமையும்.

கடந்த ஆண்டு 7 முறை நிரம்பி மேட்டூர் அணை சாதனை

மேட்டூர் அணை வரலாற்றில் கடந்த 2025-ம் ஆண்டு 7 முறை முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டி சாதனை படைத்தது. முதல் முறையாக ஜூன் 29-ந் தேதி மேட்டூர் அணை நிரம்பியது. தொடர்ந்து, ஜூலை 5, ஜூலை 20, ஜூலை 25, ஆகஸ்டு 20, செப்டம்பர் 2, அக்டோபர் 20 ஆகிய தேதிகளிலும் முழுக்கொள்ளளவை எட்டியது.

தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை கைகொடுத்ததால், மேட்டூர் அணை 7 முறை நிரம்பியது. 92 ஆண்டு கால மேட்டூர் அணை வரலாற்றில் ஒரே ஆண்டில் 7 முறை நிரம்பியது இதுவே முதல் முறை.

X

Daily Thanthi
www.dailythanthi.com