5-வது முறையாக முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணை

காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சேலம்,
கர்நாடக மற்றும் கேரள மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் தங்களது முழு கொள்ளளவை எட்டி நிரம்பின. இதனால் 2 அணைகளின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 1 லட்சத்து 16 ஆயிரம் கனஅடி தண்ணீர் தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. நேற்று இரவு 8 மணி நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 1 லட்சத்து 45 ஆயிரம் கனஅடியானது.
இதன் காரணமாக காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஒகேனக்கல் வெள்ளக்காடாக மாறியது. ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவிகள், சினிபால்ஸ் உள்பட அருவிகளை மூழ்கடித்தவாறு தண்ணீர் ஆர்ப்பரித்து சென்றது. மேலும் மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதைக்கு மேலே தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் காவிரி கரையோரம் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இதன் காரணமாக ஒகேனக்கல், சத்திரம், ராணிப்பேட்டை, ஊட்டமலை, நாடார் கொட்டாய் ஆகிய பகுதிகளில் காவிரி கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு வருவாய்த்துறையினர் ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
மேலும் வருவாய்த்துறையினர் ஒகேனக்கல் காவிரி கரையோர பகுதிகளில் தீவிர ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர். ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்தை கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இதற்கிடையே மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் கடந்த ஜூன் மாதம் 29-ந் தேதி மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியை எட்டி இந்த ஆண்டில் முதன்முறையாக நிரம்பியது. அணையில் இருந்து உபரிநீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் வெளியேற்றப்பட்டது. அதன்பிறகு அணைக்கு நீர்வரத்து குறைவதும், கூடுவதுமாக இருந்தது. அந்த வகையில் மேட்டூர் அணை அதன்பிறகு 3 முறை தனது முழு கொள்ளளவை எட்டியது.
நேற்று இரவு 8 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 1 லட்சத்து 8 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து சுமார் 70 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. அணையின் நீர்மட்டம் 119.20 அடியாக இருந்தது. அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வந்ததால் நள்ளிரவில் மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியை எட்டி இந்த ஆண்டில் 5-வது முறையாக நிரம்பியது.
இந்த நிலையில், அணையின் பாதுகாப்புக் கருதி அணைக்கு வரும் நீர் முழுவதும் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக 21,300 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 16 கண் மதகுகள் வழியாக 68,700 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் அணையின் நீர்வரத்து 1,16,683 கன அடியாக அதிகரித்துள்ளது.
அணை நிரம்பியதால் அணைக்கு வரும் தண்ணீர் 16 கண் மதகுகள் வழியாக அப்படியே வெளியேற்றப்பட்டது. இதனால் காவிரி ஆற்றின் இருகரைகளையும் தொட்டபடி தண்ணீர் சென்றது. எனவே காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.






