

சேலம்,
காவிரி டெல்டா மாவட்டங்களில் நடைபெறும் குறுவை பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12 ஆம் தேதி தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு வரும் 12 ஆம் தேதி மேட்டூர் அணையை திறக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில் மேட்டூர் அணையின் நீர்வரத்து 973 கன அடியில் இருந்து 671 கன அடியாக சரிந்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவு இல்லாததால், அணைக்கு வரும் நீர்வரத்து சரிந்திருக்கலாம் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அணையின் நீர்வரத்தை விட நீர் வெளியேற்றம் அதிகமாக உள்ளதால், நீர்மட்டம் குறைந்து வருகிறது என்றும் டெல்டா மாவட்டங்களின் குடிநீர் தேவைக்காக 2,000 கன அடி நீர் திறக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்வரத்து 973 கன அடியாக இருந்த நிலையில், இன்று 671 கன அடியாக சரிந்துள்ளது. மேலும் அணையின் நீர்மட்டம் 97.02 அடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.