

சென்னை,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மேட்டூர் அணையிலிருந்து வெளியேறும் உபரி நீரை சேலம் மாவட்டத்திலுள்ள 100 ஏரிகளில் நிரப்பும் திட்டம் ரூ.565 கோடி செலவில் செயல்படுத்தப்படும் என்று தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சேலம் மாவட்டத்தின் ஒரு பகுதிக்கு பயனளிக்கும் இத்திட்டம் வரவேற்கத்தக்கதாகும். அதே நேரத்தில் இந்த அறிவிப்பு சேலம், நாமக்கல் மாவட்ட மக்களின் எதிர்பார்ப்புகளை முழுமையாக நிறைவேற்றாது.
மேட்டூர் அணையின் உபரி நீரை திருமணிமுத்தாறு, சரபங்கா ஆகிய ஆறுகளை இணைத்து சேலம், நாமக்கல், திருச்சி மாவட்டங்கள் வரை கொண்டு செல்ல வேண்டும் என்பதுதான் மக்களின் எதிர்பார்ப்பு ஆகும். 5 இணைப்புகளை மேற்கொள்வதன் மூலம் இத்திட்டத்தை செயல்படுத்த முடியும்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி 2008-ம் ஆண்டு எனது தலைமையில் மேட்டூரில் நடத்தப்பட்ட மாபெரும் போராட்டத்தில் 50 ஆயிரத்திற்கும் கூடுதலான மக்கள் கலந்து கொண்டனர். அதன் தொடர்ச்சியாக 2017-ம் ஆண்டு ஆகஸ்டு 19, 20 ஆகிய தேதிகளில் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் விழிப்புணர்வு பிரசார பயணம் மேற்கொண்டார். இதுதவிர தமிழக சட்டப்பேரவையில் இத்திட்டத்திற்காக பத்துக்கும் மேற்பட்ட முறை பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி தீவிரமாக குரல் கொடுத்துள்ளார்.
மேட்டூர் உபரி நீர் திட்டம் எளிதாக செயல்படுத்தப்படக்கூடியதாகும். சேலம் மண்ணின் மைந்தர் முதல்-அமைச்சராக உள்ள காலத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்படுவது தான் அவருக்கு பெருமையாகும். அண்மைக்காலங்களில் இல்லாத வகையில் இப்போது தமிழக அரசு நீர்மேலாண்மைக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. அத்திக்கடவு-அவினாசி திட்டம் தொடங்கப்பட்டிருப்பதுடன், தடுப்பணைகள் உள்ளிட்ட பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட நீர் மேலாண்மை இயக்கத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அத்துடன் மேட்டூர் உபரி நீர் திட்டத்தை முழுமையாக செயல்படுத்துவது தான் சரியானதாக இருக்கும். எனவே, அதற்கேற்ற வகையில் இப்போது அறிவிக்கப்பட்டுள்ள திட்டத்தை மாற்றி அமைத்து செயல்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.