மேட்டூர் அனல் மின்நிலைய ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

மேட்டூர் அனல் மின்நிலைய ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
மேட்டூர் அனல் மின்நிலைய ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: அன்புமணி ராமதாஸ்
Published on

சென்னை,

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

மேட்டூர் அனல் மின்நிலையத்தின் முறையே 210*4 மெகாவாட், 600 மெகாவாட் திறன் கொண்ட மின்னுற்பத்திப் பிரிவுகளில் பத்தாண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் 200 பெண்கள் உள்ளிட்ட 1500 ஒப்பந்தத் தொழிலாளர்கள் தங்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கோரி பிப்ரவரி 28-ம் தேதி தொடங்கி 3-வது நாளாக இன்றும் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி அவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து பேச்சு நடத்துவதற்குக் கூட தமிழக அரசு முன்வராதது கண்டிக்கத்தக்கது.

போராடும் தொழிலாளர்களின் கோரிக்கை மிகவும் நியாயமானது. அவர்கள் அனைவரும் மேட்டூர் அனல் மின்நிலையத்தில், பல்வேறு நிறுவனங்களின் மூலமாக 10 முதல் 13 ஆண்டுகளாக ஒப்பந்தப் பணியாளர்களாக பணியாற்றி வருகின்றனர். பணிக்காலம் முழுவதும் அவர்களுக்கு மிகக்குறைந்த ஊதியம் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. அதைத் தவிர அவர்களின் சமூகப் பாதுகாப்புக்கான எந்த உரிமையும் அவர்களுக்கு வழங்கப்படவில்லை. இத்தகைய சூழலில் அவர்கள் தங்களின் வாழ்வாதாரப் பாதுகாப்பை உறுதி செய்து கொள்வதற்காக பணி நிரந்தரம் கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். பணி நிலைப்பு என்பது அவர்களின் சட்டப்பூர்வ உரிமை. அதை தமிழக அரசும், மின்வாரிய நிர்வாகமும் மறுப்பது பெரும் சமூக அநீதி ஆகும்.

திமுக தொழிலாளர்களின் உழைப்பில் வளர்ந்த கட்சி. அப்படிப்பட்ட கட்சி தொழிலாளர்களின் நலன்களை காற்றில் பறக்கவிட்டு, அவர்களின் உழைப்பை சுரண்டுவதற்கு துணைபோவது எந்த வகையில் நியாயம்?. குறைந்தது பத்தாண்டுகள் பணி செய்தால் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் உழைக்கும் தொழிலாளர்களுக்கு வாக்குறுதி அளித்து விட்டு, அதை செயல்படுத்தாமல் தொழிலாளர்களை ஏமாற்றுவதுதான் திராவிட மாடலா?.

மேட்டூர் அனல் மின்நிலையத்தில் பத்தாண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் அனைவரையும் தமிழக அரசு பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் கால் நூற்றாண்டுகளுக்கு முன் அவர்களுக்காக களமிறங்கி போராடி வெற்றி பெற்றதைப் போலவே இப்போதும் மேட்டூர் அனல் மின் நிலையத் தொழிலாளர்களுக்காக களமிறங்கி போராடுவதற்கு பாட்டாளி மக்கள் கட்சி தயங்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com