தந்தை பெரியாருக்கு புகழ் சேர்த்த எம்.ஜி.ஆர்.


தந்தை பெரியாருக்கு புகழ் சேர்த்த எம்.ஜி.ஆர்.
x

அறிஞர் அண்ணாவின் கொள்கை பிடிப்பால் எம்.ஜி.ஆர். திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.

சென்னை,

டிசம்பர் 24 (இன்று) தந்தை பெரியார் மற்றும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் நினைவு நாள். இந்த நாளில், பெரியார் மீது எம்.ஜி.ஆர். கொண்டிருந்த பற்றுதலைப் பற்றி பார்ப்போம்.

சினிமா மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த எம்.ஜி.ஆர்., அரசியலில் நுழைய காரணமாக இருந்தவர் தந்தை பெரியார். அவரது சமூக சீர்திருத்த கருத்துகளால் ஈர்க்கப்பட்ட எம்.ஜி.ஆர்., அறிஞர் அண்ணாவின் கொள்கை பிடிப்பால் திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.

திராவிட கொள்கைகளை திரைப்படங்கள் மூலம் மக்கள் மத்தியில் பரப்பினார். 1977-ம் ஆண்டு ஜூன் மாதம் 30-ம் தேதி தமிழக முதல்-அமைச்சராக முதல்முறையாக பொறுப்பேற்ற எம்.ஜி.ஆர்., தந்தை பெரியாருக்கு சிறப்பு செய்யும் வகையில் அரசின் பல திட்டங்களுக்கு அவரது பெயரை சூட்டினார். தந்தை பெரியாரின் நூற்றாண்டு விழாவை 1978 செப்டம்பர் முதல் 1979 செப்டம்பர் வரை ஒரு ஆண்டு காலம் கொண்டாட வழிவகை செய்தார்.

அதுவரை கோவை மாவட்டத்தில் இருந்த ஈரோட்டை, எம்.ஜி.ஆர். தனது ஆட்சி காலத்தில் இரண்டாக பிரித்து, பெரியார் பிறந்த ஈரோட்டை தனி மாவட்டமாக அறிவித்து, பெரியார் மாவட்டம் என்று பெயர் சூட்டினார். தமிழகத்தில் சாதிப் பிரிவினைகள் தலைவிரித்து ஆடிக்கொண்டிருந்த அந்த நேரத்தில், வீதிகளிலும், சாலைகளிலும் இருந்த சாதிப் பெயர்களை எம்.ஜி.ஆர். நீக்கினார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள நீதிமன்ற வீதியான கோர்ட்டு வீதிக்கு, பெரியார் வீதி என்று பெயர் சூட்டினார்.

பெரியாரின் பகுத்தறிவு சிந்தனைகளை தமிழகம் எங்கும் கொண்டு சேர்க்க, ஒவ்வொரு மாவட்டத்திலும் முக்கிய பகுதிகளில் நினைவுத் தூண்களை எழுப்பி, அவற்றில் பெரியாரின் வாசகங்களை பொறிக்கச் செய்தார். "தந்தை பெரியாரின் பொன்மொழிகள்" என்ற புத்தகத்தின் மீதான தடையை நீக்கியதுடன், "பெரியாரின் புரட்சி மொழிகள்" என்று புதிய தலைப்பிட்டு, மலிவு விலையில் பிரதியாக எம்.ஜி.ஆர். வெளியிட்டார்.

காவிரியின் குறுக்கே குளித்தலை - முசிறியை இணைக்கும் நீண்ட பாலத்திற்கு பெரியாரின் பெயரை எம்.ஜி.ஆர். சூட்டினார். பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை குழந்தைகளும் தெரிந்துகொள்ளும் வகையில், "குழந்தைகளுக்கான பெரியாரின் வாழ்க்கைப்பட விளக்கம்" என்னும் புத்தகத்தையும் எம்.ஜி.ஆர். தயாரித்து வெளியிட்டார்.

கேரள மாநிலம் வைக்கம் என்ற இடத்தில் 1922-ம் ஆண்டு தந்தை பெரியார் தீண்டாமைக்கு எதிராக போராடிய வரலாற்றை நினைவு கூறும் வகையில், கேரள அரசிடம் அந்த இடத்தை எம்.ஜி.ஆர். கேட்டுப் பெற்று, அங்கு பெரியார் நினைவிடத்தை அமைத்தார். சென்னை சீரணி அரங்கத்தில் நடந்த அரசு விழாவின்போது, பூந்தமல்லி நெடுஞ்சாலைக்கு தந்தை பெரியார் நெடுஞ்சாலை என்று எம்.ஜி.ஆர். பெயர் சூட்டி மகிழ்ந்தார். தந்தை பெரியாரின் வழியில் சமூகச் சீர்திருத்தப் பணிகளில் ஈடுபட்டுவந்தவர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் உதவித்தொகையை எம்.ஜி.ஆர். வழங்கி கவுரவித்தார். இப்படி, தந்தை பெரியாரின் புகழுக்கு எம்.ஜி.ஆர். பெருமை சேர்த்தார்.

1 More update

Next Story