

சென்னை,
முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் 104-வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை கிண்டி தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். உருவச்சிலைக்கு தமிழக அரசு சார்பில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், தலைமை செயலாளர் க.சண்முகம், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் மகேசன் காசிராஜன், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் தெ.பாஸ்கர பாண்டியன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உள்ளனர்.
எம்.ஜி.ஆர். பிறந்தநாளையொட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். உருவசிலைக்கு கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினர். அதனைத்தொடர்ந்து ஜெயலலிதா உருவச்சிலைக்கு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
அ.தி.மு.க. அவைத்தலைவர் இ.மதுசூதனன், துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம், முன்னாள் துணை சபாநாயகர் மு.தம்பிதுரை, ஜே.சி.டி.பிரபாகர், பி.எச்.மனோஜ்பாண்டியன் உள்பட வழிகாட்டுதல் குழு உறுப்பினர்கள், டி.ஜெயக்குமார், செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் ராஜூ உள்பட அமைச்சர்கள், சி.பொன்னையன், பா.வளர்மதி உள்பட செய்திதொடர்பாளர்கள், முன்னாள் எம்.பி. டாக்டர் மைத்ரேயன், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற தலைவர் தமிழ்மகன் உசேன் என நிர்வாகிகளும் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா உருவசிலைகளுக்கு மரியாதை செலுத்திய பின்னர் அ.தி.மு.க.வின் கட்சி கொடியை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஏற்றினர். அதனைத்தொடர்ந்து அங்கிருந்த அ.தி.மு.க. நிர்வாகிகள்-தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இனிப்புகள் வழங்கினர். பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கினர்.
எம்.ஜி.ஆரின் 104-வது பிறந்தநாளையொட்டி, டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள அவரது உருவசிலைக்கு அ.தி.மு.க. சார்பில் நாடாளுமன்ற மாநிலங்களவை குழு செயலாளர் ஏ.விஜயகுமார் எம்.பி. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
சென்னை தியாகராயநகரில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். உருவசிலைக்கு தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் சு.திருநாவுக்கரசர் எம்.பி., நடிகை லதா உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி வெளியிடப்பட்ட ரூ.100 நாணயம், நினைவு இல்லத்தில் இடம்பெறாமலேயே இருந்து வந்தது. இந்தநிலையில் அந்த ரூ.100 நாணயம் மற்றும் எம்.ஜி.ஆர். உருவம் பொறிக்கப்பட்ட ரூ.5 நாணயத்தையும் எம்.ஜி.ஆர். மீது அதீத பற்று கொண்ட அ.தி.மு.க. தொண்டர் வெங்கட்ராமன் தியாகு என்பவர், நேற்று நினைவு இல்லத்துக்கு கொண்டுவந்தார். கண்ணாடி பேழையில் வைக்கப்பட்டிருந்த அந்த நாணயங்களை அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், வழிகாட்டுதல் குழு உறுப்பினருமான ஜே.சி.டி.பிரபாகர், நடிகர் எஸ்.வி.சேகர் ஆகியோர், நினைவு இல்லத்தை பராமரித்து வரும் அறக்கட்டளை நிர்வாகியும், டாக்டர் எம்.ஜி.ஆர்.-ஜானகி மகளிர் கல்லூரி தாளாளருமான குமார் ராஜேந்திரனிடம் வழங்கினார்கள்.
ஏ.சி.சண்முகம், கமல்ஹாசன்
சென்னையை அடுத்த வேலப்பன்சாவடியில் உள்ள ஏ.சி.எஸ். மருத்துவக்கல்லூரி வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு புதிய நீதிக்கட்சி நிறுவனர் ஏ.சி.சண்முகம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத்தொடர்ந்து பொதுமக்களுக்கு வேட்டி, சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் ஏ.சி.சண்முகத்தின் மனைவி லலிதா லட்சுமி, புதிய நீதிக்கட்சி செயல்தலைவர் ஏ.ரவிக்குமார் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். சென்னை ராமாபுரத்தில் உள்ள தோட்டத்தில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நடிகர் கமல்ஹாசன் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
டி.டி.வி தினகரன்
எம்.ஜி.ஆர். பிறந்தநாளையொட்டி சென்னை அண்ணாசாலையில் அமைந்துள்ள அவருடைய உருவச்சிலைக்கு அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பிரேமலதா விஜயகாந்த் மரியாதை
எம்.ஜி.ஆர். பிறந்த நாளை யொட்டி சென்னையில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத் தில் அவருடைய உருவப்படத்துக்கு கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நிர்வாகிகள் மரியாதை செலுத்தினார்.