விவசாயிகளுக்காக மின் கட்டணத்தை குறைக்க மறுத்தவர் எம்.ஜி.ஆர். - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

விவசாயிகளுக்காக மின் கட்டணத்தை குறைக்க மறுத்தவர் எம்.ஜி.ஆர். எனறு மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
விவசாயிகளுக்காக மின் கட்டணத்தை குறைக்க மறுத்தவர் எம்.ஜி.ஆர். - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
Published on

திருவாரூர்,

தனது ஆட்சி காலத்தில் நாராயணசாமி நாயுடு கோரிக்கையை நிராகரித்து, விவசாயிகளுக்காக மின் கட்டணத்தை குறைக்க மறுத்தவர் எம்.ஜி.ஆர். எனறு மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், திருவாரூர் மாவட்டம் - நன்னிலம் சட்டமன்ற தொகுதி, வலங்கைமான் ஒன்றியத்துக்குட்பட்ட அவளிவநல்லூர் ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் கிராமசபை கூட்டத்தில் பங்கேற்று பேசியதாவது:-

4 மாதங்கள் பொறுத்துக் கொள்ளுங்கள். ஒரு ஆட்சிமாற்றம் வரப்போகிறது. இந்த 4 மாதங்களில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு நீங்கள் தயாராகி விட்டீர்களா?. இந்தியாவிலேயே முதன் முதலில் தமிழ்நாட்டில்தான், கருணாநிதி ஆட்சி காலத்தில்தான் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டது என்பதை யாராலும் மறக்கவும், மறைக்கவும் முடியாது.

மறைந்த எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருந்தபொழுது, அன்றைக்கு விவசாய சங்க தலைவராக இருந்த நாராயணசாமி நாயுடு தலைமையில், விவசாயிகளுக்குரிய மின்சார கட்டணத்தை ஒரு பைசா மட்டும் குறைக்க வேண்டும் என்று ஒரு போராட்டம் நடத்தினார்கள். அப்போது அந்த கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று எம்.ஜி.ஆர். திட்டவட்டமாக தெரிவித்து விட்டார்.

அதனால் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றது. விவசாயிகள் சங்க தலைவராக இருந்த நாராயணசாமி நாயுடு திருச்சியில் போராட்டம் நடத்திக்கொண்டிருந்தபோது, காவல்துறையினர் அவரை அடித்து, காலை உடைத்து, மருத்துவமனையில் படுக்க வைத்த சம்பவங்கள் எல்லாம் நடைபெற்றன.

ஆனால், கருணாநிதி முதல்-அமைச்சராக வந்தார். சட்டமன்றத்தில் அவர் பேசும்போது சொன்னார். விவசாயப் பெருங்குடி மக்கள் எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில் மின்சார கட்டணத்தை ஒரு பைசா குறைக்க வேண்டும் என்று போராடினீர்கள். யாரும் என்னிடத்தில் மனு தரவில்லை. இருந்தாலும் நான் முன்கூட்டியே அறிவிக்கிறேன். ஒரு பைசா கட்டண குறைப்புக்காக போராடிய நீங்கள் இனி ஒரு பைசா கூட கட்டணம் செலுத்த வேண்டாம். மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று அவர் அறிவித்தார்.

இன்றைக்கு இருக்கும் எடப்பாடி பழனிசாமி, தன்னை ஒரு விவசாயி என்று சொல்லிக்கொள்கிறார். ஆனால் அவர் பச்சைத் துரோகியாக செயல்பட்டுக்கொண்டு இருக்கிறார். இதை நன்றாக மனதில் பதிய வைத்துக்கொள்ளுங்கள். எப்போது பார்த்தாலும் அவர், நான் ஒரு விவசாயி நான் ஒரு விவசாயி என்று சொல்லிக்கொண்டிருக்கிறார். ஒரு ரவுடிதான், எப்பொழுதும் நான் ஒரு ரவுடி, நான் ஒரு ரவுடி என்று சொல்லிக்கொண்டே இருப்பான்.

இந்த தொகுதி எம்.எல்.ஏ. அதாவது உணவுத்துறை அமைச்சராக இருக்கும் - காமராஜ் - 5,36,000 டன் அரிசியை வெளி மார்க்கெட்டில் விற்று ஊழல் செய்தவர்தான் அவர். இதுபற்றி கவர்னரிடம் ஆதாரபூர்வமாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாப்பாட்டில் ஊழல் செய்த அமைச்சரை காவிரி டெல்டா நிச்சயம் மன்னிக்காது. நீங்களும் மன்னிக்க மாட்டீர்கள். நிச்சயமாக அவருக்கு சரியான பாடத்தை வழங்குவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்று அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com