நள்ளிரவில் கொடூரம்: கணவர் குடும்பத்தினரை உயிருடன் எரித்துக்கொன்ற இளம்பெண், தாய், சகோதரர்; கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு

7 பேர் கொடூர கொலை குறித்து சேடப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து பாண்டீஸ்வரி, முருகேஸ்வரி, ராஜபாண்டி ஆகியோரை கைது செய்தனர்.
மதுரை
Published on

மதுரை

கணவர் குடும்பத்தினரை நள்ளிரவில் உயிருடன் எரித்துக்கொன்ற இளம்பெண் தொடர்பான வழக்கில் மதுரை கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.

மதுரை மாவட்டம் சேடபட்டி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட குமாரபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது 25). பி.காம் பட்டதாரி. கடந்த 2015-ம் ஆண்டில் இவரும், அதே பகுதியை சேர்ந்த பாண்டீஸ்வரி (வயது 21) என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். சில மாதங்களிலேயே இரு குடும்பத்தினருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் கர்ப்பிணியாக இருந்த பாண்டீஸ்வரிக்கு கருக்கலைப்பு செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு நிலவியதால் பாண்டீஸ்வரி தன் பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். இவர்களுக்கு இடையேயான பிரச்சினையை ஊர் பிரமுகர்கள் முன்னிலையில் தீர்த்து வைக்கும் முயற்சிகளும் நடந்தன.

நள்ளிரவில் தீ வைப்பு

ஆனாலும் இரு தரப்பிலும் சுமூக தீர்வு ஏற்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பாண்டீஸ்வரி, அவரது தாய் முருகேஸ்வரி (வயது 40), தம்பி ராஜபாண்டி (வயது 20) ஆகியோர் கண்ணன் குடும்பத்தினரை பழி வாங்க திட்டமிட்டனர். குமாரபுரத்தில் உள்ள குடிசை வீட்டில் கண்ணன், அவரது தந்தை வேலு, தாயார் பேச்சியம்மாள், சகோதரி சுகந்தி, அவரது மகள் சங்கீதா (வயது 17), மகன்கள் சஞ்சித் (வயது 12), வினித் (வயது 10) ஆகிய 7 பேரும் சம்பவத்தன்று நள்ளிரவில் தூங்கிக்கொண்டு இருந்தனர்.

அப்போது அங்கு வந்த பாண்டீஸ்வரி, அவரது தாயார் முருகேஸ்வரி, ராஜபாண்டி ஆகிய 3 பேரும் சேர்ந்து தாங்கள் கொண்டு வந்த பெட்ரோலை குடிசை மீது ஊற்றினர். பின்னர் வீட்டுக்குள் இருப்பவர்கள் வெளியே வர முடியாதபடி கதவை கட்டுக்கம்பியால் இறுகக்கட்டினர். பின்பு அந்த வீட்டுக்கு தீ வைத்தனர். அந்த தீ வீடு முழுவதும் பரவி கொழுந்து விட்டு எரியும் வரை அங்கேயே அவர்கள் இருந்து வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்துள்ளனர்.

7 பேர் பலி

தீயினால் ஏற்பட்ட வெப்பம் அக்கம் பக்கத்து வீடுகளில் பரவியதால் அலறி அடித்துக்கொண்டு நள்ளிரவில் வெளியேறிய கிராம மக்கள் இதுகுறித்து தீயணைப்புத்துறைக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து வீட்டுக்குள் இருந்தவர்களை மீட்க முயன்றனர்.

இதில் சிறுவன் வினித் மட்டும் உயிருக்கு போராடினான். மற்ற 6 பேரும் தீயில் கருகி வீட்டுக்குள்ளேயே உயிரிழந்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வினித்தும் சிறிது நேரத்தில் இறந்தார். 7 பேர் கொடூர கொலை குறித்து சேடப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து பாண்டீஸ்வரி, முருகேஸ்வரி, ராஜபாண்டி ஆகியோரை கைது செய்தனர்.

8 ஆயுள் தண்டனை

இந்த வழக்கு மதுரை மாவட்ட 6-வது கூடுதல் செசன்சு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. இந்த வழக்கில் நீதிபதி உதய வேலவன் நேற்று பரபரப்பு தீர்ப்பளித்தார். அதில், 7 பேர் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவத்திற்காக ஒவ்வொரு கொலைக்கும் ஒவ்வொரு ஆயுள் தண்டனை வீதம் தலா 7 ஆயுள் தண்டனையும், கூட்டுச்சதி தண்டனை சட்டத்தின் கீழ் ஒரு ஆயுள் தண்டனையும் என மொத்தம் 8 ஆயுள் தண்டனையை பாண்டீஸ்வரி, முருகேஸ்வரி, ராஜபாண்டி ஆகிய 3 பேருக்கும் விதிக்கப்படுகிறது. இந்த தண்டனையை மேற்கண்ட 3 குற்றவாளிகளும் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும். அவர்களுக்கு ரூ.45 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது என கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com