

திருவாரூர்,
குளிர்ச்சியான கால நிலை நிலவுவதால் முத்துப்பேட்டை அலையாத்திக்காட்டில் வெளிநாட்டு பறவைகள் குவிந்து வருகின்றன. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் அலையாத்திகாடுகள் காணப்படுகிறது. இந்த காடுகள் திருவாரூர், தஞ்சை, நாகை மாவட்டங்களில் பரவி காணப்படுகிறது. இது மேற்கே தஞ்சை மாவட்டத்தில் அதிராம்பட்டினம் பகுதியில் தொடங்கி திருவாரூர் மாவட்டத்தை கடந்து கிழக்கே நாகை மாவட்டத்தின் கோடியக்கரை பகுதிவரை நீண்டுள்ளது.
இந்த அலையாத்திக்காட்டுக்கு கோடை காலம் மற்றும் குளிர்காலங்களில் தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பறவைகள் வந்து தங்கி இனப்பெருக்கம் செய்து சொந்த பகுதிகளுக்கு திரும்புவது வழக்கம்.
தற்போது பருவமழை காலம் தொடங்கி உள்ளதால் அப்பகுதியில் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இதனால் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பறவைகள் வந்துள்ளன.
அதில் நத்தைகுத்தி நாரை, நீலத் தாழைக்கோழி, இரவு நாரை, பாம்புத்தாரா, கூழைக்கடா, துடுப்பு வாயன், நாமக்கோழி, நாரை, வெள்ளை கழுத்து நாரை, சாம்பல் ஹெரான், நீர்க் காகம் உள்பட பல்வேறு பறவைகள் குவிந்து வருகின்றன.
இப்பறவைகளின் வரத்து இயற்கையின் எழில் கொஞ்சும் அலையாத்திகாட்டிற்கு புதுப்பொலிவை தந்துள்ளது. இந்த பறவைகளை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர்.
பிப்ரவரி, மார்ச் மாதங்களில் சீசன் காலமாக இருந்ததாலும் தற்போது பருவமழை காலம் என்பதால் பனிப்பொழியும் காலம் என்பதாலும் இம்மாதத்தில் வருடா வருடம் பறவைகள் வந்து செல்வது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் அதிக அளவில் பறவைகள் வருவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து முத்துப்பேட்டை பொறுப்பு வனசரக அலுவலர் ரஞ்சித் கூறுகையில், இந்த அக்டோபர் மாதம் முதல் பறவைகள் சீசன் தொடங்கி உள்ளதால் ஐரோப்பா, ஆசியா, மியான்மர், இலங்கை போன்ற நாடுகளில் இருந்து பறவைகள் வர தொடங்கி உள்ளன. இந்த சீசன் இனப்பெருக்கத்திற்கு ஏற்ற இடமாக இப்பகுதி விளங்குகிறது. இந்த பறவைகள் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் முதல் முத்துப்பேட்டை, தொண்டியக்காடு, கோடியக்கரை வரை காணப்படுகிறது.
மேலும், பறவைகள் கணக்கெடுப்பு பணி பிப்ரவரி மாதம் நடைபெறும் எனவும், பறவைகளை பிடிப்பதோ, வேட்டையாடுவதோ, துன்புறுத்துவதோ, இந்திய வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1972 படி 7 ஆண்டு சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும் என்றார்.