இஸ்லாமியர்களுக்கு மிலாது நபி வாழ்த்துகள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை விமான நிலையம் அருகே ரூ.65 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு ஹஜ் இல்லம் அமைக்கப்பட்டு வருகிறது என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள மிலாது நபி வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:
நபிகள் நாயகத்தின் பிறந்தநாளினைக் கொண்டாடிடும் அன்புக்குரிய இசுலாமியச் சகோதரர்கள் அனைவருக்கும் எனது மிலாது நபி வாழ்த்துகள்!
உண்மை, இரக்கம், ஈகை, அன்பு, கல்வியறிவு, புறம்பேசாமை, பெண்களை மரியாதையோடு நடத்துதல் என உலகத்துக்கு என்றென்றும் தேவையான நற்கருத்துகளைப் போதித்த உயர்ந்த உள்ளமாகத் திகழ்ந்தவர் அண்ணல் நபி அவர்கள். அவரது போதனைகளைப் பின்பற்றி வாழ்ந்திடும் இசுலாமிய உடன்பிறப்புகளின் உரிமைகளுக்கும், நலனுக்கும் என்றும் உழைத்திடும் அரசாகக் கழக அரசு ஒவ்வொரு முறை ஆட்சியமைக்கும்போதும் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
இட ஒதுக்கீடு, கல்வி உதவித் தொகை, சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களுக்கு ஆதரவு என எண்ணற்ற நற்பணிகளை எப்போதும் கழக அரசு செய்யத் தவறியதே இல்லை. அண்மையில் கூட சென்னை விமான நிலையம் அருகே 65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாடு ஹஜ் இல்லம் அமைக்கப்பட்டு வருகிறது. சிறுபான்மைச் சமூகத்தினரின் சமூக, பொருளாதார நிலையை உயர்த்திடுவதில் நமது திராவிட மாடல் அரசு கண்ணும் கருத்துமாக இருந்து செயலாற்றி வருகிறது.
மேலும் இஸ்லாமியர்களுக்கும் இலங்கைத் தமிழருக்கும் எதிரான குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து ஆட்சிக்கு வந்ததுமே சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதோடு, தமிழ்நாட்டில் CAA நடைமுறைப்படுத்தப்படாது என்று துணிச்சலோடு அறிவித்ததும் நமது திராவிட மாடல் அரசுதான்!
இப்படி உங்களில் ஒருவராகவே இருந்து செயல்படும் அரசின் சார்பில், எனது அன்பார்ந்த மிலாது நபி வாழ்த்துகளை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.






