இஸ்லாமிய சகோதரர்கள் அனைவருக்கும் மிலாது நபி வாழ்த்துகள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

இஸ்லாமிய மக்களின் கோரிக்கைகள் அனைத்தையும் திராவிட மாடல் அரசு நிறைவேற்றி வருகிறது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமிய சகோதரர்கள் அனைவருக்கும் மிலாது நபி வாழ்த்துகள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
Published on

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

நபிகள் நாயகத்தின் பிறந்தநாளைச் சிறப்பாகக் கொண்டாடும் இஸ்லாமிய சகோதரர்கள் அனைவருக்கும் எனது இனிய மிலாது நபி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மனிதர்களிடையேயான வேற்றுமைகளைக் களைந்தெறியவும், அடிமை வணிகம் உள்ளிட்ட சமூக அநீதிகளுக்கு எதிராகவும் அன்றே குரல் கொடுத்தவர் நபிகள் நாயகம் ஆவார். அவரது போதனைகள் அமைதியான, சமத்துவ உலகுக்கு வழிகாட்டும் நெறிமுறைகள் ஆகும்.

உழைப்பவர்களின் கூலியை அவர்களது வியர்வை உலரும் முன்பே கொடுத்து விடுங்கள் என எளியவர்களுக்காகப் பேசினார். உங்களை நீங்களே பெருமைப்படுத்திக் கொள்ள வேண்டாம்" எனப் பணிவுடைமையை வலியுறுத்தினார். கற்றவண்ணம் நடப்பவரே உண்மையில் கற்றவர் என வாழ்க்கைக்கான நெறிமுறையை வகுத்துக் காட்டினார். அதன்படியே வாழ்ந்தும் காட்டினார் நபிகள் நாயகம் அவர்கள்.

அவர் காட்டிய வழியில் வறியவர்க்கு உதவுவது, இயற்கைச் சீற்றம், பெருந்தொற்று உள்ளிட்ட நெருக்கடியான காலங்களில் தன்னலமற்று மக்களுக்காகச் சேவையாற்றுவது, பசித்தோருக்கு உணவளிப்பது என இஸ்லாமிய மக்கள் வாழ்ந்து சமூக நல்லிணக்கத்தைப் பேணி வருகின்றனர்.

நபிகள் நாயகம் வழிநடக்கும், நமது திராவிட மாடல் அரசும் இஸ்லாமிய மக்களின் கோரிக்கைகள் அனைத்தையும் அன்புடன் செவிமடுத்து நிறைவேற்றி வருகிறது. வக்ப் சட்டத்திருத்த மசோதா போன்றவற்றால் அவர்களின் உரிமைகளுக்கு பாதிப்பு ஏற்படும்போது பாராளுமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் உரக்கக் குரல் கொடுத்து உறுதியாக உடன் நிற்கிறது. இஸ்லாமிய மக்களின் பாதுகாவலனாக, அவர்களது சகோதரனாக என்றும் நிற்கும் இயக்கமான திராவிட முன்னேற்றக் கழக அரசின் சார்பில் மீண்டும் எனது மிலாது நபி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com