சென்னையில் முதன் முறையாக ராணுவ கண்காட்சி மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தகவல்

சென்னையில் முதன் முறையாக ராணுவ கண்காட்சி ஏப்ரல் 11-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை நடைபெறுகிறது என்று மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார்.
சென்னையில் முதன் முறையாக ராணுவ கண்காட்சி மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தகவல்
Published on

சென்னை,

மத்திய பாதுகாப்பு துறையின் உற்பத்தி பிரிவு சார்பில் ராணுவ தொழில் வளர்ச்சி 2 நாள் கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று தொடங்கியது. கூட்டத்தை மத்திய ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் தொடங்கிவைத்தார். ராணுவத்துக்கு தேவையான பொருட்களை தயாரித்து வழங்கும் தனியார் நிறுவனங்கள் அரங்குகள் அமைத்து இருந்தனர். இதனை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்து பார்வையிட்டார்.

விழாவில் ராணுவத்துக்கு தேவையான தளவாடங்களை தயாரித்து வழங்கும் தனியார் நிறுவனங்களுக்கு அதற்கான ஆணையை நிர்மலா சீதாராமன் வழங்கினார். பாதுகாப்பு துறைக்கு பொருட்கள் வழங்க விரும்பும் உற்பத்தியாளர்களுக்கான இணையதளத்தை தொடங்கிவைத்தும், எளிதாக்கப்பட்ட விதிமுறைகள் அடங்கிய 2 புத்தகங்களை வெளியிட்டும் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:-

அக்னி ஏவுகணை

முதல்முறையாக பாதுகாப்பு துறைக்கு தனியார் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் பொருட்களை தயாரித்து வழங்குவது தொடர்பான கலந்துரையாடல் கூட்டம் நடைபெறுகிறது. தனியார் இதில் ஈடுபடுவதன் மூலம் பாதுகாப்புக்கு எந்தவித பாதிப்பும் வராது. தனியாரும் நாட்டின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிப்பார்கள்.

கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு துறையின் பொருட்களை பார்த்து தொழில் அதிபர்கள் தயாரித்து வழங்கலாம். அக்னி 5 ஏவுகணை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி சோதிக்கப்பட்டுள்ளது. அதில் பயன்படுத்தப்பட்ட பொருட்களில் பெரும்பாலானவற்றை தமிழக தொழில் நிறுவனங்கள் அளித்துள்ளன.

தமிழ்நாட்டில் இருந்து 100 நிறுவனங்கள் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்துக்கு பொருட்கள் அளித்து வருகின்றன. அதேபோல் தமிழகத்தின் 35 நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து தொழில்நுட்பத்தை பெற்று பொருட்களை தயாரித்து வழங்கி வருகின்றன.

இந்தியாவில் உற்பத்தி

பிரதமர் நரேந்திரமோடி இந்தியாவில் உற்பத்தி செய்வோம் என கூறியது பிற தொழில்துறைக்கு மட்டும் அல்ல. உலகிலேயே பாதுகாப்புத் துறைக்கு தேவையான தளவாடங்களை இறக்குமதி செய்யும் நாடுகள் பட்டியலில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது. அதனை குறைப்பதற்காக இந்தியாவிலேயே உற்பத்தி செய்வதை ஊக்குவித்து வருகிறோம்.

பாதுகாப்பு துறையில் உற்பத்தியை எதிர்நோக்கி மேக்-1 என்ற கொள்கையை வெளியிட்டோம். அதில் சில இடையூறுகள் இருப்பதாக தெரிவித்தனர். எனவே அதனை மாற்றி மேக்-2 என்ற எளிதாக்கப்பட்ட விதிமுறைகளை வெளியிட்டுள்ளோம். அதில் முக்கியமாக நீங்கள் தங்களிடம் உள்ள தயாரிப்புகளை பாதுகாப்புத் துறைக்கு வேண்டுமா? என கேட்க முடியும்.

பாதுகாப்புத் துறையில் 2013-14-ம் ஆண்டில் ரூ.41 ஆயிரம் கோடிக்கு தளவாடங்கள் இறக்குமதி செய்யப்பட்டது. 2016-17ம் ஆண்டில் அது ரூ.31 ஆயிரம் கோடியாக குறைந்து இருக்கிறது. அது மேலும் குறைய வேண்டும்.

முதல் முயற்சியாக தமிழ்நாட்டில் தான் இந்த கூட்டத்தை ஆரம்பித்துள்ளோம். சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மற்றும் தற்போது பொருட்களை வழங்கும் நிறுவனங்கள் பாதுகாப்பு துறைக்கு தேவையான வகையில் எவ்வாறு மாற வேண்டும் என்பது குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்படும்.

சென்னை மாமல்லபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் ராணுவ கண்காட்சி ஏப்ரல் 11-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 80 வெளிநாடுகளை சேர்ந்த நிறுவனங்களும் கலந்துகொள்கின்றன. சென்னையில் முதல்முறையாக இந்த கண்காட்சி நடைபெற உள்ளது.

ராணுவம், கடற்படை, விமானப்படை தொடர்புடைய பல்வேறு தளவாடங்கள், பொருட்கள் இதில் இடம்பெறும். பாதுகாப்பு துறைக்கு பொருட்கள் வழங்கும் சிறு, குறு தொழில் நிறுவனங்களும் கண்காட்சியில் தங்களின் பொருட்களை காட்சிப்படுத்த சிறப்பு சலுகை அளிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் அமைச்சர்கள் தங்கமணி, எம்.சி.சம்பத், பெஞ்சமின் மற்றும் முப்படை அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

நிறைவு விழா இன்று (வெள்ளிக்கிழமை) மாலை நடக்கிறது. இதில் கவர்னர் பன்வாரிலால் புரோகித், மத்திய மந்திரி டாக்டர் சுபாஷ் பாஹேம்ரே ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com