பால் கலப்பட நிறுவனங்கள் மீது எடுத்த நடவடிக்கை என்ன? பதில் அளிக்க அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

பால் கலப்பட நிறுவனங்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்பது பற்றி அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
பால் கலப்பட நிறுவனங்கள் மீது எடுத்த நடவடிக்கை என்ன? பதில் அளிக்க அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
Published on

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் ஏ.பி.சூர்யபிரகாசம் தாக்கல் செய்துள்ள மனுவில், தனியார் நிறுவனங்கள் கலப்பட பால் விற்பனை செய்வதாக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கடந்த 2017-ம் ஆண்டு குற்றம்சாட்டினார். அவர் மீது தனியார் நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்தன. அமைச்சரே இப்படி ஒரு புகார் கூறுவதால், பால் கலப்படம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விசாரித்த ஐகோர்ட்டு கலப்படம் செய்யும் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது உணவு பாதுகாப்புத்துறை இயக்குனர் டாக்டர் வனஜா நேரில் ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்தார்.

அந்த அறிக்கையை படித்து பார்த்த நீதிபதிகள், பொதுமக்களின் ஆரோக்கியத்துக்கு மிரட்டல் விடுக்கும் பால் கலப்படத்தை கண்மூடி வேடிக்கை பார்க்க முடியாது. இந்த விஷயத்தில் நீதிமன்றம் தலையிட்ட பிறகுதான், அதிகாரிகளும் சோதனைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். எடுக்கப்பட்ட 790 மாதிரி சோதனை முடிவுகளில் 113 சோதனைகள் தரம் குறைந்தவை என கண்டறியப்பட்ட பிறகும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதுதொடர்பான அறிக்கையும் தாக்கல் செய்யப்படவில்லை என்று கருத்து தெரிவித்தனர்.

பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
பால் கலப்பட பேர்வழிகள் மற்றும் நிறுவனங்கள் மீது குற்றவியல் மற்றும் உரிமையியல் ரீதியாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என்பது குறித்து தமிழக அரசு விரிவான அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும். அதேபோல கீழ் கோர்ட்டுகளில் பால் கலப்படம் தொடர்பான வழக்குகள் பல மாதங்கள் நடைபெற்றும் இன்னும் இறுதிகட்டத்துக்கு வரவில்லை. இதே நிலைதான் மாவட்ட வருவாய் அலுவலர்கள் முன்பாக உள்ள வழக்குகளும் உள்ளன.

எனவே தமிழகம் முழுவதும் பால் கலப்படம் தொடர்பாக எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது?, அந்த வழக்குகளின் தற்போதைய நிலவரம் என்ன?, எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளன?, கலப்படம் செய்தவர்களுக்கு அளிக்கப்பட்ட தண்டனை விவரம் என்ன?, அவர்களிடம் வசூலிக்கப்பட்ட அபராதம் எவ்வளவு? உள்ளிட்ட விவரங்களை ஆண்டுவாரியாக கீழ் கோர்ட்டுகளிடம் இருந்து சென்னை ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் பெறவேண்டும்.

அதேபோல இந்த விஷயத்தில் ஒத்துழைப்பு அளிக்க மறுக்கும் அதிகாரிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க நேரிடும். பொதுமக்களின் உடல் ஆரோக்கியத்துக்கு தீங்கு விளைவிக்காத தரமான பால் கிடைப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். அதற்கேற்ப பாலின் தரத்தை அதிகாரிகள் தொடர்ந்து திடீர் சோதனை நடத்தி ஆய்வு செய்ய வேண்டும். ஒருவேளை உணவு பாதுகாப்புத்துறையின் நடவடிக்கைகள் திருப்தியளிக்கவில்லை என்றால், சுகாதாரத்துறைச் செயலாளரை நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும். இந்த வழக்கு விசாரணையை பிப்ரவரி 26-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறோம். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com