பால் விலை உயர்வு எதிரொலி: ஆவின் ஐஸ்கிரீம், இனிப்புகள் விலை உயருகிறது

ஆவின் பால் விலை உயர்வு எதிரொலியாக, ஆவின் ஐஸ்கிரீம்கள் மற்றும் இனிப்புகள் விலையும் உயருகிறது.
பால் விலை உயர்வு எதிரொலி: ஆவின் ஐஸ்கிரீம், இனிப்புகள் விலை உயருகிறது
Published on

சென்னை,

பால் கொள்முதல் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் ஆவின் பால் விற்பனை விலை லிட்டருக்கு ரூ.6 உயர்த்தப்படும் என்று அரசு அறிவித்தது. இந்த புதிய நடைமுறை நேற்று அமலுக்கு வந்தது. பால் விலை உயர்வை தொடர்ந்து ஆவின் வெண்ணெய் மற்றும் நெய்யின் விலை உயர வாய்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.

அதேபோல சுவையூட்டப்பட்ட யோகர்ட், இனிப்பில்லா யோகர்ட், பன்னீர், தயிர், மோர், லஸ்சி, பாதாம் பால் போன்ற பால் சார்ந்த பொருட்களும் விலை ஏற்றப்பட இருக்கிறது. அதேவேளையில் ஆவினின் இதர தயாரிப்புகளான ஐஸ்கிரீம் மற்றும் இனிப்புகள் விலையும் உயரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது ஆவின் கடைகளில் இனிப்பு கோவா, பேரிச்சை கோவா, மைசூர் பாகு, குலோப் ஜாமூன், பால்பேடா, ரசகுல்லா ஆகிய இனிப்புகள் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல பலவகையான ஐஸ்கிரீம்களும் விற்பனை செய்யப்படுகின்றன. தற்போது பால் விலை உயர்த்தப்பட்டதை தொடர்ந்து மேற்கண்ட பொருட்களின் விலையும் உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதொடர்பாக துறை சார்ந்த அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். தற்போது வரை ஆவினில் பால் தவிர இதர பொருட்களின் விலையில் எந்த மாற்றமும் செய்யவில்லை. விலை மாற்றம் தொடர்பான அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை டீக்கடைகளிலும் டீ-காபி விலை உயருமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. டீக்கடைகளில் பெரும்பாலும் தனியார் பால் பாக்கெட்டுகளையே அதிகளவில் வாங்கி பயன்படுத்துகின்றனர். எனவே நிச்சயம் டீக்கடைகளில் டீ-காபி விலையை உயர்த்த வாய்ப்பில்லை. எனவே ஆவின் பால் விலையை காரணம் காட்டி டீக்கடைகளில் டீ-காபியின் விலையை ஏற்றக்கூடாது, அப்படி ஏற்றினால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com