கொளுத்தும் வெயிலால் பசுக்களில் பால்சுரப்பு குறைந்தது - விவசாயிகள் கவலை

வெப்பத்தின் தாக்கத்தால் பசுக்கள் தீவனம் உட்கொள்ளும் அளவு குறைந்துள்ளது.
கொளுத்தும் வெயிலால் பசுக்களில் பால்சுரப்பு குறைந்தது - விவசாயிகள் கவலை
Published on

சென்னை,

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அக்னி நட்சத்திரத்தையும் மிஞ்சும் அளவுக்கு வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் மதிய வேளைகளில் வீடுகளுக்குள் முடங்கும் பொதுமக்கள், இரவு நேரங்களிலும் வெப்பத்தின் தாக்கம் நீடிப்பதால் அவதிப்பட்டு வருகின்றனர்.

குறிப்பாக விவசாயிகள் கடும் பாதிப்பை சந்திக்கின்றனர். வெப்பத்தின் தாக்கத்தால் பாசன நீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு வருவதால், பயிர்களைப் பாதுகாக்க போராடி வருகின்றனர். கோடையில் சாகுபடிப் பணிகள் நடைபெறாமல் பல நிலங்கள் தரிசாகக் கிடக்கிறது., விவசாயிகளின் வருவாய்க்கு கால்நடை வளர்ப்பு கைகொடுத்து வருகிறது.

இந்தநிலையில் வெப்பத்தின் தாக்கத்தால் பசுக்கள் தீவனம் உட்கொள்ளும் அளவு குறைந்துள்ளதால், பால் உற்பத்தியும் வெகுவாகக் குறைந்துள்ளது. வெயிலின் தாக்கம் மனிதர்களை விட பசுக்களை அதிக அளவில் பாதித்துள்ளது. இதனால் அவை குறைந்த அளவில் தீவனம், அதிக அளவில் தண்ணீர் என்ற வகையிலேயே எடுத்துக் கொள்கிறது. இதனால் வழக்கமாக கறப்பதை விட பாதிக்கும் குறைவாகவே பால் கறக்கிறது.

அதுவும் அடர்த்தி குறைந்து மிகவும் தண்ணீராக உள்ளது. இதனால் பால் கொள்முதல் நிலையங்களில் லாக்டோ மீட்டர் மூலம் அளவீடு செய்து டிகிரி (அடர்த்தி) குறைவு எனக் கூறி குறைந்த விலைக்கே கொள்முதல் செய்கின்றனர் என விவசாயிகள் கூறினர்.

இதுகுறித்து கால் நடைத்துறையினர் கூறியதாவது:-

பசுக்கள் நேரடியாக வெயிலில் நிற்காமல், நிழல் தரும் இடங் களில் தங்கவையுங்கள். பனை, தென்னை ஓலை அல்லது புற்கள் கொண்டு கூரை அமைப்பது குளிர்ச்சி தரும். மேலும் நீர்த்தெளிப்பான் அல்லது மின் விசிறி அமைத்து வெப்பத் தைக் குறைக்கலாம். தினசரி 1 அல்லது 2 முறை பசுக்களின் மீது குளிர்ந்த நீரை தெளிக்கலாம். குளிர்ந்த காற்றோட்டம் நிறைந்த இடத்தில் பசுக்களை தங்க வைப்பது அவசியம்.

தீவன மேலாண்மையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.பசுந்தீவனம், அடர்தீவனம் மற்றும் சைலேஜ் போன்றவற்றுடன், தாது உப்புக் கலவை வழங்குவதும் அவசியமாகும். வெயில் நேரத்தில் பால் கறக்காமல் அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் கறக்க வேண்டும். இவ்வாறு பசுக்களின் பராமரிப்பில் கூடுதல் கவனம் செலுத்தினால், பால் உற்பத்தி குறைவதை பெருமளவு தடுக்க முடியும் என்று கால்நடைத்துறையினர் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com