

சென்னை,
ஆவின் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு குறைந்தது ரூ.10 உயர்த்தி, கொள்முதலை அதிகரிக்க வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் ஆவின் பாலுக்கு கடந்த சில நாள்களாக கடும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. ஏழைகள் மற்றும் குழந்தைகளுக்கு வரப்பிரசாதமாக விளங்கும் ஆவின் பால் அனைத்து மக்களுக்கு தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய அரசு தவறியிருப்பது கவலையளிக்கிறது.
ஆவின் நிறுவனத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் தினமும் 31 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்பட்டு வந்தது. சென்னையில் மட்டும் தினமும் 16 லட்சம் லிட்டருக்கும் கூடுதலாக ஆவின் பால் விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால், கடந்த சில மாதங்களாகவே ஆவின் பால் விற்பனை படிப்படியாக குறைந்து விட்டது. ஒட்டுமொத்த தமிழ்நாட்டிலும் ஆவின் பால் விற்பனை மூன்றில் ஒரு பங்கு குறைக்கப்பட்டு விட்டதாகவும், சென்னையில் 20% அளவுக்கு குறைக்கப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆவின் பால் தட்டுப்பாட்டால் தமிழக மக்கள் இரு வகைகளில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். முதலில் ஆவின் நிறுவனத்தின் மூலம் விற்பனை செய்யப்படும் பால் தான் ஒப்பீட்டளவில் தூய்மையானதாகவும், கலப்படம் இல்லாததாகவும் உள்ளது. இதனால் மூத்த குடிமக்கள், குழந்தைகள் உள்ளிட்ட அனைவருக்கும் ஆவின் பாலை வழங்கும்படி மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். ஆனால், ஆவின் பாலுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால் குழந்தைகளுக்கும், பெரியோர்களுக்கும் தரமான பாலை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இரண்டாவதாக, ஆவின் பால் விலை தட்டுப்பாட்டால் தனியார் நிறுவன பால்களை அதிக விலை கொடுத்து மக்கள் வாங்க வேண்டியுள்ளது. ஆவின் பாலுடன் ஒப்பிடும்போது தனியார் நிறுவனங்களின் பால் விலை லிட்டருக்கு ரூ.16 முதல் 24 வரை அதிகம் ஆகும். ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால் ஏழைகள் மாதத்திற்கு குறைந்தது ரூ.750 வரை கூடுதலாக செலவு செய்ய வேண்டும். இது அவர்களுக்கு பெரும் சுமை.
ஆவின் பாலுக்கு ஏற்பட்டிருக்கும் தட்டுப்பாட்டால் ஏழை மற்றும் நடுத்தர மக்களிடையே பெரும் கவலையும், கோபமும் ஏற்பட்டுள்ள நிலையில், அது குறித்து ஆவின் நிறுவனம் எந்தக் கவலையும் பட்டதாக தெரியவில்லை. கோடைக்காலம் என்பதால் பால் உற்பத்தி குறைந்திருப்பதுதான் இந்த தட்டுப்பாட்டுக்கு காரணம் என்று கூறி இந்த விவகாரத்தை மிகவும் எளிதாக கடந்து செல்ல ஆவின் நிறுவனம் முயல்கிறது. இது உண்மையல்ல.
கடந்த ஐந்தாண்டுகளாகவே ஆவின் பால் கொள்முதல் படிப்படியாக வீழ்ச்சியடைந்து வருகிறது. 2021-ம் ஆண்டில் ஆவின் நிறுவனத்தின் பால் கொள்முதல் தினமும் 41 லட்சம் லிட்டராக இருந்தது. 2022-ம் ஆண்டில் 38 லட்சம் லிட்டர், 2023-ம் ஆண்டில் 30 லட்சம் லிட்டர் என குறைந்த ஆவின் பால் கொள்முதல், இப்போது 28 லட்சம் லிட்டராக குறைந்து விட்டது. அதாவது மூன்றில் இரு பங்காகி விட்டது.
ஆவின் பால்கொள்முதல் 13 லட்சம் லிட்டர் குறைந்திருப்பதற்கு காரணம் அதன் கொள்முதல் விலைகள் உயர்த்தப்படாததுதான். பசும்பாலுக்கு லிட்டர் ஒன்றுக்கு ரூ.35, எருமைப்பாலுக்கு லிட்டர் ஒன்றுக்கு ரூ.44 என்ற அளவில் ஆவின் நிறுவனத்தால் வழங்கப்பட்டு வந்த கொள்முதல் விலையுடன் சேர்த்து லிட்டருக்கு ரூ.3 வீதம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், தனியார் நிறுவனங்கள் அதை விட லிட்டருக்கு 12 வரை கூடுதல் விலை கொடுத்து கொள்முதல் செய்கின்றன. அதற்கு இணையாக ஆவின் நிறுவனமும் பால் கொள்முதல் விலையை உயர்த்தாமல் அதன் கொள்முதலை அதிகரிக்க முடியாது.
ஆனால், ஆவின் நிறுவனமும், அரசும் இதை உணரவில்லை. ஆவின் பால் கொள்முதல் குறையவில்லை என்றும், கோடை வெப்பத்தால் குறைந்த அளவு மட்டும்தான் உயர்த்தப்பட்டிருப்பதாகவும் காரணம் கூறி வருகிறது. இந்த மாயையில் இருந்து தமிழக அரசு மீள வேண்டும். ஆவின் பால் கொள்முதல் வீழ்ச்சி அடைந்திருப்பதற்கான உண்மையான காரணத்தை அறிந்து கொண்டு உடனடியாக சரி செய்ய வேண்டும்.
ஆவின் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு குறைந்தது ரூ.10 உயர்த்தி, கொள்முதலை அதிகரிக்க வேண்டும். அதன் மூலம் ஆவின் பால் மாநிலம் முழுவதும் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.