திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று வெற்றிப்பெறுவதை தங்கள் இலக்காக கொண்டு பயணிக்க வேண்டும் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.
விளையாட்டு அரங்கத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
Published on

திருவண்ணாமலை,

கலந்துரையாடினார்

பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இன்று திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் ஆய்வு மேற்கொண்டு விளையாட்டு வீரர், வீராங்கனைகளுடன் கலந்துரையாடினார். இந்த ஆய்வின் போது இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அரசு முதன்மைச் செயலாளர் சந்தீப் நந்தூரி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் வந்தனா கார்க் உடனிருந்தார்.

பிசியோ மருத்துவர்களை நியமிக்கப்படும்

பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் தடகள விளையாட்டு வீராங்கனைகளை சந்தித்து அவர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சிகள் குறித்து கலந்துரையாடினார். மேலும் அவர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு புரதச்சத்துமிக்க தரமான உணவுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், விளையாட்டு மாணவ மாணவியர்களின் உடல் நலனை பேணிடும் வகையில் பிசியோ மருத்துவர்களை நியமிக்கப்படும் என்றும், விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பயிற்சி முடித்த பிறகு ஏற்படும் உடல் அசதியை கருத்தில் கொண்டு 45 நிமிடம் வரை பள்ளிகளுக்கு செல்ல தளர்வு நேரம் ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் விளையாட்டு மாணவியர்களுக்கு சர்வதேச தரத்திலான உடை மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

ஒலிம்பிக் போட்டி

விளையாட்டு வீரர், வீராங்கனைகள் விளையாட்டில் சிறப்பு கவனம் செலுத்தி அரசின் சார்பாக அளிக்கப்படும் சேவைகளை மூலமாக பல்வேறு பதக்கங்களை பெற்று சாதனைகள் புரியவேண்டும் என்றும், ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று வெற்றிப்பெறுவதை தங்கள் இலக்காக கொண்டு பயணிக்க வேண்டும் என்றும், அதேபோன்று கல்வியிலும் தனி கவனம் செலுத்தி நல்ல மதிப்பெண் பெற்று அரசின் சார்பாக வழங்கப்படும் மூன்று சதவீத இட ஒதுக்கீட்டில் அரசு பணியினை பெற்று தங்கள் வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள்.

ஆய்வு

தொடர்ந்து மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் புதியதாக ரூ.10.15 கோடி மதிப்பீட்டில் சர்வதேச தரத்தில் சிந்தடிக் தரையுடன் நிறுவப்பட்டு வரும் ஹாக்கி உள் விளையாட்டு அரங்கத்தை பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள். மேலும் விளையாட்டு மாணவியர் விடுதியில் மாணவியர்களுக்கு அளிக்கப்படும் உணவினை உண்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் விடுதியின் உட்கட்டமைப்பு வசதிகளையும், மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் உள்ள நீச்சல் குளம் முறையாக பராமரிக்கப்படுவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மருத்துவ மாணவர்களுடன் கலந்துரையாடினார்

அதனை தொடர்ந்து பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கூட்டரங்கில் மருத்துவ மாணவர்களுடன் கலந்துரையாடினார். இந்த கலந்துரையாடலில் பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது:-

உடற்தகுதியை மேம்படுத்தும் வகையில் முக்கிய திட்டங்கள்

விளையாட்டு என்பது வெறும் போட்டி மட்டுமல்ல, அது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பேணுவதற்கும், மன அழுத்தத்தை குறைப்பதற்குமான ஒரு வாழ்க்கை முறையாகும். தற்போது மருந்துகள் மற்றும் மருத்துவ செலவுகளுக்காக ஆண்டுதோறும் சுமார் 30,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மக்களிடையே விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி பழக்கத்தை ஊக்குவிப்பதன் மூலம் இந்தச் செலவினத்தைக் குறைக்க முடியும். எனவே, பொதுமக்களிடையே, குறிப்பாக இளைஞர்களிடையே விளையாட்டு மற்றும் உடற்தகுதியை மேம்படுத்தும் வகையில் முக்கிய திட்டங்களை செயல்படுத்த தமிழ்நாடு முதல்-அமைச்சர் திட்டமிட்டுள்ளார்.

நான் ஒரு கிராமப்புற விளையாட்டு வீரர்

மேலும், மருத்துவ கல்லூரிகளிலும் மருத்துவர்களுக்கான விளையாட்டு நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். அவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்க காலை அல்லது மாலை வேளைகளில் ஒரு மணி நேர விளையாடுவதற்கு செலவிட மருத்துவ பேராசிரியர்களுக்கு பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் அறிவுறுத்தினார்கள். நான் ஒரு கிராமப்புற பின்னணியிலிருந்து வந்த விளையாட்டு வீரர். விளையாட்டு வீரர்களுக்கு இருப்பது போலவே, மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்களுக்கும் பணி மற்றும் படிப்பு சார்ந்த அழுத்தங்கள் உள்ளன.

மன அழுத்தம்

உடல் தகுதியுடன் இருந்தால், சிறப்பாக படிக்கவும் மக்களுக்காக துடிப்புடன் பணியாற்றவும் முடியும். ஓட்டம், நடைப்பயிற்சி, நீச்சல் அல்லது ஏதேனும் ஒரு விளையாட்டு என ஒரு மணி நேரம் செலவிடுவது அவசியம். மருத்துவர்களின் மன அழுத்தம் நோயாளிகளின் ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடும் என்பதால், மருத்துவர்கள் ஆரோக்கியமாக இருப்பது மிக முக்கியம் என மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் அறிவுறுத்தினார்.

இந்த நிகழ்விகளில் போளூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.அபிஷேக், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.ம.சுதாகர், மாவட்ட வருவாய் அலுவலர்இரா.இராம்பிரதீபன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணை இயக்குநர் மற்றும் திட்ட இயக்குநர் ஆர்.மணி, திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் ஜெயலால், இணை இயக்குநர் (நலப்பணிகள்) கவிதா, மண்டல முதுநிலை மேலாளர் சாந்தி, மாவட்ட இளைஞர் நல அலுவலர் சண்முகாப்பிரியா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com