

சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
ஒலிம்பிக்கில் பங்கேற்கும் ஆர்வமுடைய 2 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் நிதி உதவிக் கோரியதையொட்டி உடனடியாக ரூ. 5.80 லட்சத்திற்கான காசோலைகளை பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர்ஆதவ் அர்ஜுனா இன்று (25.05.2026) நேரு விளையாட்டரங்கில் வழங்கினார். இதனைத் தொடர்ந்து விளையாட்டுத் துறை அமைச்சர் தெரிவித்ததாவது:-
விளையாட்டில் ஆர்வமுள்ள வீரர், வீராங்கனைகளை கண்டறிந்து விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் மூலம் அவர்களை சாதனையாளர்களாக மாற்றிட தற்போது பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் காதுக் கேட்கும் திறன் குறைந்தவர்களுக்கான ஒலிம்பிக்கில் பங்கேற்று தற்பொழுது எதிர்வரும் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல ஆர்வமுடைய தமிழ்நாட்டைச் சேர்ந்த தடகள வீராங்கனை செல்வி சமீஹா பர்வீன் மற்றும் தேசிய அளவிலானப் போட்டிகளில் பங்கேற்ற நீச்சல் வீரர் அபிஷேக் ஆகியோர் நிதி உதவிக் கோரியிருந்தார்கள்.
இவர்கள் பல்வேறுப் பயிற்சிப் போட்டிகளில் கலந்துக் கொள்ளவும், தேவையான உபகரணங்கள் மற்றும் ஊட்டச்சத்து மேம்பாட்டிற்கு உதவிடும் வகையில் ஒலிம்பிக் போட்டிகளிலும், ஏனைய பன்னாட்டு அளவிலானப் போட்டிகளிலும் பதக்கம் வெல்லும் திறன் கொண்ட, தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித் தொகைத் திட்டத்தின் கீழ் விளையாட்டு வீராங்கனை சமீஹா பர்வீன்க்கு ரூ. 3 லட்சமும், விளையாட்டு வீரர் அபிஷேக் ரூ. 2.80 லட்சத்திற்கான காசோலையும் உடனடியாக இன்றைய தினம் வழங்கப்பட்டது.
மேலும் தமிழகத்தில் திறமையான விளையாட்டு வீரர் வீராங்கனைகளை கண்டறிந்து தேசிய மற்றும் உலக அளவிலானப் போட்டிகளில் பங்கேற்க செய்து சாதனையாளர்களாக திகழச் செய்யும் வகையில் அவர்களுக்கு தேவையான பொருளாதார உதவிகளை செய்திட தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விளையாட்டு மேம்பாட்டுத் துறை தொடர்பான கோரிக்கைகள் குறித்து விளையாட்டு வீரர்கள், விளையாட்டு சங்க நிர்வாகிகள் எவ்வித சிரமமின்றி நாள்தோறும் காலை 7 மணி முதல் 10 மணி வரை சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் என்னை சந்திக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விளையாட்டுத் துறை உயர் அலுவலர்களும் காலை 7 மணி முதல் நேரு உள்விளையாட்டரங்கில் விளையாட்டு வீரர், வீராங்களைனகளின் கோரிக்கைகளுக்கு விரைந்து தீர்வு காணும் வகையில் உடன் பணிபுரிந்து வருகின்றனர்.
அந்த வகையில் இன்றைய தினம் விளையாட்டுத் துறை தொடர்பாக விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனு அளித்துள்ளனர். இவற்றில் பெரும்பாலான மனுக்களின் மீது விளையாட்டுத் துறை அலுவலர்கள் உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். மேலும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாடு ஆணையத்தின் கீழ் அனைத்து மாவட்டங்களிலும் செயல்பட்டு வரும் விளையாட்டரங்கங்கள், பயிற்சிக் கூடங்கள், விளையாட்டு வீரர்கள் தங்கும் விடுதிகள் ஆகியவைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு பொதுப்பணி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் தெரிவித்தார்.
இந்நிகழ்வின் போது, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அரசு செயலாளர் சஜ்ஜன்சிங் ரா சவான், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ. மேகநாத ரெட்டி, மாவட்ட வருவாய் அலுவலர் ரெ. சுமன், பொது மேலாளர் எல். சுஜாதா, மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.