

சென்னை,
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நிறுவனத்துக்கு வெளிநாட்டு கார் வாங்கி தருவதாக கூறி ரூ.2.60 கோடி மோசடியில் ஈடுபட்ட இடைத்தரகர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு சொந்தமான நிறுவனம் ஒன்று சென்னை ஆழ்வார்பேட்டை பகுதியில் செயல்படுகிறது. இந்த நிறுவனத்தின் இயக்குனர் ராம்குமார் (வயது 45) என்பவர் சென்னை தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
அந்த புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
எங்கள் நிறுவனத்தின் பயன்பாட்டுக்காக கடந்த 2024-ம் ஆண்டு டயோட்டோ லன்ட் குரூசர் 300 இசட் எக்ஸ் என்ற காரை வாங்க முடிவு செய்தோம். இது, வெளிநாட்டு கார் ஆகும். இதை வாங்குவதற்காக கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த அனுப் சுமித் பெர்னாண்டஸ் என்ற இடைத்தரகரை அணுகினோம்.
அவர், தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள தனியார் நிறுவனத்தின் மூலம் மேற்படி வெளிநாட்டு காரை வாங்கி தருவதாக கூறினார். அதற்கான முழு பணத்தையும் செலுத்திய பிறகு 40 நாட்களுக்குள் குறிப்பிட்ட கார் வாங்கி தரப்படும் என்று உறுதி அளித்தார். அதன்பேரில் 2 தவணைகளாக ரூ.2.60 கோடியை குறிப்பிட்ட தனியார் நிறுவனத்தின் வங்கி கணக்கிற்கு பரிமாற்றம் செய்தோம்.
ஏமாற்றும் நோக்கம்
ஆனால், பேசியபடி அனுப் சுமித் பெர்னாண்டஸ் குறிப்பிட்ட காரை வாங்கி தரவில்லை. இதனால் நாங்கள் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டோம். அந்த பணத்தையும் தரவில்லை. அவர் ஏமாற்றும் நோக்கத்தோடு செயல்படுவது தெரியவந்துள்ளது. எனவே, உரிய சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்து நாங்கள் கொடுத்த ரூ.2.60 கோடி பணத்தை மீட்டு தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த புகார் மனு தொடர்பாக தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் குறிப்பிட்ட கார் வெளிநாட்டில் இருந்து வாங்கப்பட்டு மும்பை துறைமுகத்துக்கு உரிய அனுமதி பெறாமல் கொண்டுவரப்பட்டதாகவும், அதனால் சுங்கத்துறையினர் ரூ.65 லட்சம் வரி போட்டதாகவும் கூறப்படுகிறது.
இடைத்தரகர் அனுப் சுமித் பெர்னாண்டஸ், இந்த பிரச்சினையை முறையாக அணுகாததால் மேற்படி காரை மும்பையில் இருந்து சென்னைக்கு கொண்டுவர முடியவில்லை என்று தெரியவந்தது.
இதுபற்றி அவரிடம் விசாரிப்பதற்காக அவரை அணுகியபோது அவர் வெளிநாடு தப்பி சென்று விட்டார். எனவே, லுக் அவுட் நோட்டீஸ் வழங்கி அவர் பற்றிய தகவல்கள் அனைத்து விமான நிலையங்களுக்கும் அனுப்பப்பட்டது.
கடந்த 5-ந் தேதியன்று அனுப் சுமித் பெர்னாண்டஸ், கத்தார் நாட்டில் இருந்து விமானம் மூலம் மும்பை விமான நிலையத்துக்கு வந்து இறங்கினார்.
மும்பை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் அவரை மடக்கி பிடித்து, தேனாம்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக தேனாம்பேட்டை தனிப்படை போலீசார் மும்பைக்கு விரைந்து சென்று அனுப் சுமித் பெர்னாண்டசை கைது செய்து நேற்று முன்தினம் சென்னை அழைத்து வந்தனர்.
அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.