சாரண, சாரணியர் இயக்கத்தின் தலைவராக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி போட்டியின்றி தேர்வு

சாரண, சாரணியர் இயக்கத்தின் தலைவராக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

தமிழ்நாடு சாரணர் இயக்கத்தின் நிர்வாகிகள் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த 2010-ம் ஆண்டு நடந்த தேர்தலுக்கு பிறகு, தேர்தல் நடத்தப்படாமல் இருந்து வந்தது. அதன்பின்னர் கடந்த 2017-ம் ஆண்டு தமிழ்நாடு சாரணர் அமைப்பின் செயற்குழு, பொதுக்குழு நிர்வாகிகளின் பதவிகாலம் 5 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டு, தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16-ந்தேதி தேர்தல் நடந்தது.

இதில் பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜாவும் போட்டியிட்டார். ஆனால் அவர் அந்த ஆண்டு வெற்றி பெறவில்லை. அந்த தேர்தலில் பள்ளிக்கல்வித் துறை முன்னாள் இயக்குனர் மணி தலைவர் பதவிக்கு வெற்றி பெற்றார். மேலும் துணைத் தலைவர்கள் உள்பட நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் 5 ஆண்டுகள் பதவிக்காலம் முடிந்த நிலையில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், தமிழ்நாடு சாரண, சாரணியர் இயக்கத் தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல், மாநில முதன்மை ஆணையராக பள்ளிக்கல்வித் துறை கமிஷனர் நந்தகுமாரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்பு நாவலர் நெடுஞ்செழியன், பேராசிரியர் அன்பழகன், தங்கம் தென்னரசு ஆகியோர் சாரண, சாரணியர் இயக்கத்தில் முக்கிய நிர்வாகிகள் பொறுப்பில் இருந்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com