

சென்னை,
திமுக இளைஞரணி செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான உதயநிதி ஸ்டாலின் இன்று திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். திருமண நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின் தவெக அரசை விமர்சனம் செய்தார்.
அவர் பேசுகையில், தமிழகத்தில் இப்படிப்பட்ட மோசமான அரசுக்கு வாக்களித்துவிட்டோமே என்று மக்கள் வருத்தப்படுகின்றனர். இந்த சோபா மாடல் ஆட்சியை மக்கள் வீட்டிற்கு அனுப்பும் நாள் வெகுதொலைவில் இல்லை. தமிழகத்தில் மீண்டும் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமையும்’ என்று கூறினார். மேலும், உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், 4 இருக்கை கொண்ட சோபா தற்போது 5 இருக்கை கொண்ட சோபாவாக உயர்த்தப்பட்டுள்ளது’ என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், உதயநிதியின் பேச்சுக்கும், எக்ஸ் பதிவுக்கும் தவெக கொள்கை பரப்பு பொதுச்செயலாளரும், சுகாதாரத்துறை அமைச்சருமான அருண்ராஜ் பதிலடி கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் அருண்ராஜ் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,
தந்தை பெரியார் மற்றும் பேரறிஞர் அண்ணா அவர்களை கேடயமாகப் பயன்படுத்தி, தாத்தாவுக்கு பின் மகன், மகனுக்குப் பின் பேரன் என ஒரு குடும்பம் மட்டுமே ஊறித் திளைக்கும் “sonஆதன” சிம்மாசனத்தில் சரிந்து கிடக்கும் வாரிசுத் தலைவர் உதயநிதி ஸ்டாலின்....
அதிகாரத்தை பரவலாக்கும் , அனைவரையும் அமர வைக்கும் ஜனநாயக சோபாக்கள் பற்றி உங்களுக்கு எப்படி தெரிந்திருக்கும்?
நான்கு பேர் மட்டுமல்ல, ஐந்து பேர் மட்டுமல்ல... முதல்-அமைச்சர் தலைமையில் ஒட்டுமொத்த அமைச்சர்களும் அமர்ந்திருக்கும் ஜனநாயக சோபா இது.
சனாதன சிம்மாசனங்களுக்கு ஜனநாயக சோபாக்கள் பற்றி பேசுவதற்கு அருகதையோ, யோக்கியதையோ கிடையாது!
தமிழ்நாட்டில் 04.05.2026 அன்று வாரிசுகளின் சிம்மாசனம் ஒழிக்கப்பட்டு விட்டது. இனி தமிழ்நாட்டில் முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலே அனைவருக்கும் அதிகார பகிர்வு அளிக்கக்கூடிய ஜனநாயக சோபா மட்டும் தான்!
இவ்வாறு தெரிவித்துள்ளார்.