கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைச்சர் அருண்ராஜ் ஆய்வு..!

மருத்துவமனையின் பல்வேறு சிகிச்சை பிரிவுகள் மற்றும் கழிவறை பகுதிகளை அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைச்சர் அருண்ராஜ் ஆய்வு..!
Published on

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைச்சர் அருண்ராஜ் இன்று ஆய்வு செய்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

மருத்துவமனையில் ஆய்வு

இன்றைய தினம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேரடி ஆய்வு மேற்கொண்டோம்.

மருத்துவமனையின் பல்வேறு சிகிச்சை பிரிவுகள் மற்றும் கழிவறை பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தோம். மருத்துவமனை வளாகத்தை தூய்மையாக பராமரிக்க அலுவலர்கள் மற்றும் பராமரிப்பு ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தினோம்.

கிருஷ்ணகிரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இருதய அவசர சிகிச்சைக்காக Cath Lab வசதியை கொண்டு வருவதற்கான அறிவிப்பை நாம் ஏற்கனவே மருத்துவத்துறையின் மானிய கோரிக்கையில் வெளியிட்டோம்.

பணியிடங்கள் விரைவில் உருவாக்கப்படும்

மேலும் இம்மருத்துவமனை அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலை NH 44 விபத்து அதிகம் நடக்கும் பகுதியாக இருப்பதால், விபத்துக்குள்ளானவர்களுக்கான அவசர சிகிச்சைக்காக நரம்பியல் அறுவை சிகிச்சை ( Neurosurgery) மருத்துவர்களுக்கான பணியிடங்கள் விரைவில் உருவாக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர், மருத்துவக் கல்லூரி முதல்வர் மற்றும் மருத்துவர்களுடன்... முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் செயல்பாடுகள் மற்றும் மருத்துவமனை வளாகத்தில் செய்ய வேண்டிய மேம்பாட்டு பணிகள் குறித்தும் விரிவாக ஆலோசித்தோம்.

இந்த ஆய்வின்போது கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் முகுந்தன், ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இளையராஜா, மாவட்ட ஆட்சித் தலைவர் ச. தினேஷ் குமார், மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் சத்தியபாமா ஆகியோர் உடன் இருந்தனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com