

சென்னை,
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வருகிற 11-ந்தேதி தொடங்குகிறது. இந்த நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் எம்.பி.க்கள் கூட்டம் நேற்று நடந்தது. மாலை 5 மணிக்கு தொடங்கிய இந்த கூட்டம் மாலை 6.15 மணி வரை நடைபெற்றது.
இதில், கடந்த நாடாளுமன்ற கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் முடக்கியது போல மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு மத்திய அரசு அளித்துள்ள அனுமதியை திரும்பப் பெற வலியுறுத்தி நாடாளுமன்ற கூட்டத் தொடரை முடக்க அறிவுரை வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் கஜா புயலால் பாதித்த பகுதிகளுக்கு நிவாரண நிதியாக தமிழக அரசு கேட்ட ரூ.15 ஆயிரம் கோடியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வலியுறுத்தியும் குரல் எழுப்பவேண்டும் எனவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டதாக தெரிகிறது. கூட்டத்தில் துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம் எம்.பி. மற்றும் எம்.பி.க்கள் கலந்து கொண்டனர்.
ஆலோசனை
எம்.பி.க்கள் கூட்டத்தை தொடர்ந்து மாலை 6.15 மணி முதல் 6.45 மணி வரை ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன், டாக்டர் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட அமைச்சர்களுடன் இன்று(வியாழக்கிழமை) நடைபெற உள்ள சட்டசபை சிறப்பு கூட்டம் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.
கூட்டம் முடிந்து வெளியில் வந்த அமைச்சர் டி.ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
எல்லாவிதமான அழுத்தங்களும்...
கஜா புயல் நிவாரணமாக ரூ.15 ஆயிரம் கோடியை மத்திய அரசிடம் கோரியிருக்கிறோம். முதற்கட்டமாக ரூ.352 கோடி கொடுத்துள்ளனர். அடுத்தடுத்த தவணைகளில் எதிர்பார்த்த நிதியை மத்திய அரசு தரும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
நதிகள் விவகாரத்தில் மாநில அரசின் உரிமைகள் மற்றும் விவசாயிகளின் உரிமைகள் காப்பாற்றப்பட வேண்டும். அந்த வகையில் கடந்த காலத்திலும் சரி, இப்போதும் சரி அ.தி.மு.க. அரசின் முழுமையான சட்டப்போராட்டம் காரணமாக நமது உரிமைகளை பெற்றிருக்கிறோம்.
இருப்பினும் மேகதாது அணை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மீறி கர்நாடகா அரசு செயல்படுகிறது. எனவே கர்நாடக அரசு மீது தமிழக அரசு அவதூறு வழக்கு தொடுத்துள்ளது. மேகதாது விவகாரத்தில் மாநில அரசின் நலனை காப்பாற்றும் வகையில் எல்லாவித அழுத்தங்களும் நாடாளுமன்றத்தில் நிச்சயம் கொடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.