முட்டுக்காட்டில் கலைஞர் பன்னாட்டு அரங்கம் அமைக்கும் பணி: அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு


முட்டுக்காட்டில் கலைஞர் பன்னாட்டு அரங்கம் அமைக்கும் பணி: அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
x

முட்டுக்காட்டில் ரூ.525 கோடி மதிப்பீட்டில் கலைஞர் பன்னாட்டு மாநாட்டு அரங்கம் அமைக்கப்பட உள்ளது.

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பி, முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதியின் பெயரில், சென்னையில் புதிய உலகத் தரமான பன்னாட்டு அரங்கம் நிறுவப்படும் என 2.6.2023 அன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அந்த அறிவிப்பின்படி, அரசாணை (நிலை) எண்: 23, பொதுப்பணித் (ஓய் 1) துறை சார்பில் ரூ.525 கோடி மதிப்பீட்டில், செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் தாலுகா, முட்டுக்காட்டில் 'கலைஞர் பன்னாட்டு மாநாட்டு அரங்கம் மையம்' கட்ட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதற்காக, அரசாணை (நிலை) எண்: 20, பொதுப்பணித் (ஓய் 1) துறை, நாள்: 5.8.2024 அன்று, செங்கல்பட்டு மாவட்டம், முட்டுக்காடு கிராமம், கிழக்குக் கடற்கரைச் சாலையில் 37.99 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி நில மாற்றம் செய்ய பொதுப்பணித்துறை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த நிலத்தில் புதிய கட்டிடம் உருவாக்கப்பட உள்ளது.

மேலும், ரூ.525 கோடி மதிப்பீட்டிலான இந்த திட்டத்தின் கீழ், சுமார் 5,000 இருக்கைகள் கொண்ட மாநாட்டுக் கூடம், 10,000 பேர் பார்வையிடும் வசதி கொண்ட கண்காட்சி அரங்கம், கூட்ட அரங்குகளுக்கான அரங்கம் ஆகியன அமைய உள்ளன. இந்த பன்னாட்டு அரங்கத்தில் திறந்தவெளி அரங்கம், உணவு விடுதிகள், சுமார் 10,000 வாகனங்களை நிறுத்தும் அளவுக்கு வாகன நிறுத்த வசதிகள், சாலை வசதி, நுழைவு வாயில், சுற்றுச்சூழல் வசதி என அனைத்து வசதிகளுடன் உலகத் தரத்தில் அமைக்கப்பட உள்ளது.

இப்பணியினை 2025-ம் ஆண்டு இறுதியில் அல்லது 2026-ம் ஆண்டு தொடக்கத்தில் முடிக்க பொதுப்பணித்துறை திட்டமிட்டுள்ளது. தற்போதைய பணிகளின் நிலை தொடர்பாகவும் கூடுதலாக மேற்கொள்ளப்பட்ட வேண்டிய பணிகள் குறித்தும் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைதுறை அமைச்சர் எ.வ.வேலு பொதுப்பணித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மங்கத் ராம் சர்மா, அவர்களுடன் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகளிடம் பணிகளின் நிலைகள் குறித்து விவாதித்தார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story