இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பள்ளி, கல்லூரிகளின் கல்வித்தரம் மேம்படுத்தப்படும் அமைச்சர் தகவல்

இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பள்ளி மற்றும் கல்லூரிகளின் கல்வித்தரம் மேம்படுத்தப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சென்னையில் கூறினார்.
இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பள்ளி, கல்லூரிகளின் கல்வித்தரம் மேம்படுத்தப்படும் அமைச்சர் தகவல்
Published on

சென்னை,

சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் அலுவலகத்தில், கோவில்களின் பள்ளி மற்றும் கல்லூரிகளின் மேம்பாடு குறித்த சீராய்வு கூட்டம் நேற்று நடந்தது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமை தாங்கினார்.

சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலர் டாக்டர் பி.சந்திரமோகன், இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் ஜெ.குமரகுருபரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கல்வி தரம் மேம்பாடு

கூட்டத்தில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசியதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில், கோவிலுக்கு சொந்தமான பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை மேம்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். அதன்படி தமிழகத்தில் உள்ள கோவிலுக்கு சொந்தமான 36 பள்ளிகள், 5 கல்லூரிகள் மற்றும் 1 தொழில்நுட்ப கல்லூரிகளில் அடிப்படை தேவைகள், மாணவர்களின் சேர்க்கை, கல்வித்தரம் மேம்படுத்தப்படும்.

பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் பிரதிநிதிகள் விரைவில் தங்களுடைய பள்ளிகளுக்கு தேவையான செயல்முறை திட்டத்தை தயார் செய்து ஒரு மாத காலத்திற்குள் அரசுக்கு அனுப்ப வேண்டும். ஒவ்வொரு பள்ளி, கல்லூரிகளில் சாரணர் இயக்கம், நாட்டு நலப்பணி திட்ட இயக்கம் போன்ற சமூக அமைப்புகளை ஏற்படுத்தி அதில் மாணவ, மாணவிகளை ஊக்குவிக்க வேண்டும். அந்த மாணவர்களை கொண்டு பள்ளிகளை சுத்தமாக வைக்க வேண்டும்.

காலி பணியிடங்கள்

கோவிலுக்கு சொந்தமான கல்வி நிறுவனங்களை மேம்படுத்த சிறந்த கல்வியாளர்களை கொண்டு ஆலோசனை மேற்கொள்ளப்படும். பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உள்ள காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். கல்லூரியில் ஏற்படுத்தப்பட்டுள்ள சுயநிதி பாடப்பிரிவுகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு பணிநியமனம் மற்றும் ஊதியம் முரண்பாடின்றி ஒரே மாதிரியாக வழங்கப்படும்.

பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குரிய பணிமூப்பு மற்றும் தகுதியின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஆய்வு கூட்டத்தில் கூடுதல் கமிஷனர் (நிர்வாகம்) இரா.கண்ணன், தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ராஜேந்திரன், கல்வியாளர் ஜெ.அஜித்பிரசாத் ஜெயின் மற்றும் கோவில்களுக்கு சொந்தமான பள்ளி, கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com