தீ விபத்தில் தீக்கிரையான பனியன் பஜார் பகுதியை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆய்வு

திருப்பூரில் தீ விபத்தில் தீக்கிரையான பனியன் பஜார் பகுதியை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆய்வு செய்தார். அதே இடத்தில் பனியன் கடைகள் அமைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்று அவர் கூறினார்.
தீ விபத்தில் தீக்கிரையான பனியன் பஜார் பகுதியை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆய்வு
Published on

திருப்பூரில் தீ விபத்தில் தீக்கிரையான பனியன் பஜார் பகுதியை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆய்வு செய்தார். அதே இடத்தில் பனியன் கடைகள் அமைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்று அவர் கூறினார்.

அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆய்வு

திருப்பூர் காதர்பேட்டையில் தீ விபத்து ஏற்பட்ட பனியன் பஜாரை சம்பந்தப்பட்ட அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேற்று காலை ஆய்வு செய்தார். தீ விபத்தில் கடைகளை இழந்த வியாபாரிகளிடம் அவர் விசாரித்தார்.

பின்னர் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறியதாவது:-

பனியன் பஜாரில் இரவு 9 மணி அளவில் சிறுவியாபாரிகள் வியாபாரம் செய்த இடத்தில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு அனைத்து கடைகளுக்கும் தீ பரவி சேதமடைந்தது. மாவட்ட நிர்வாகம், தீயணைப்புத்துறை மூலம் மற்ற பகுதிகளுக்கு தீ பரவ விடாமல் தடுக்கப்பட்டது. மேலும் தீயணைப்புத்துறை மூலம் இரவு 11 மணி அளவில் முற்றிலும் தீ அணைக்கப்பட்டது.

கடைகள் அமைக்க ஏற்பாடு

இந்த தீ விபத்தில் 48 பனியன் விற்பனை கடைகள், 1 அலுவலகம், 1 கழிப்பிடம், 4 இருசக்கர வாகனங்கள் முற்றிலும் சேதமடைந்தது. 3 வீடுகளும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு சுமார் ரூ.3 கோடியாகும். சம்பவம் நடந்ததும் கலெக்டர், மாநகராட்சி ஆணையாளர், சப்-கலெக்டர், தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் விரைந்து வந்து தீயணைப்பு பணியை துரிதப்படுத்தியுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக எம்.எல்.ஏ. மற்றும் மக்கள் பிரதிநிதிகள் ஏற்பாட்டில் மீண்டும் அதே இடத்தில் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் கடைகள் அமைக்கும் பூர்வாங்க பணிகள் செய்யப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து கலெக்டர், அரசிடம் தெரிவித்து ஏற்பாடு செய்ய இருக்கிறார்.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

இந்த ஆய்வின்போது கலெக்டர் கிறிஸ்துராஜ், க.செல்வராஜ் எம்.எல்.ஏ., மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் கிரியப்பனவர், சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், துணை மேயர் பாலசுப்பிரமணியம், 4-வது மண்டல தலைவர் இல.பத்மநாபன் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com