ஸ்டெர்லைட்டை மூடும் அரசாணை: ஐ.நா. சபைக்கு சென்றாலும் செல்லுபடியாகும் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

ஸ்டெர்லைட் ஆலையை மூடும் அரசாணை ஐ.நா. சபைக்கு சென்றாலும் செல்லுபடியாகும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
ஸ்டெர்லைட்டை மூடும் அரசாணை: ஐ.நா. சபைக்கு சென்றாலும் செல்லுபடியாகும் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
Published on

சென்னை,

அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ஸ்டெர்லைட் விவகாரத்தை பொறுத்தவரை அந்த நிறுவனம் எந்தநிலையிலும் மீண்டும் திறக்கப்படக்கூடாது என்ற உறுதியான நிலைப்பாட்டில் அரசு இருக்கிறது. இதற்கான அரசாணை போடப்பட்டது. தூத்துக்குடியில் இயல்பு நிலை திரும்பியுள்ளது. விசாரணை கமிஷனும் அதற்கான பணியை தொடங்கிவிட்டது. துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக எழுப்பப்படும் கேள்விகளுக்கு, விசாரணை ஆணையம் அரசுக்கு பதில் அளிக்கும். அதன் அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுக்கும்.

விசாரணை ஆணையம் கொடுக்கும் பரிந்துரையின் அடிப்படையில் யார் தவறு செய்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் அறிவித்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலை விஷயத்தில் முழுமையான அளவுக்கு ஜெயலலிதா காலத்தில் இருந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்து சட்டசபையில் முதல்-அமைச்சர் விளக்கியிருக்கிறார். பசுமை தீர்ப்பாயம், சுப்ரீம் கோர்ட்டில் இதுதொடர்பாக கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கூடாது என்பதுதான் எங்கள் நிலைப்பாடு. மு.க. ஸ்டாலின் இந்த விவகாரம் குறித்து நீதிமன்றத்துக்கு செல்வதில் எங்களுக்கு, மாறுபட்ட கருத்து கிடையாது. ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு நாங்கள் எடுத்த நடவடிக்கைகள் குறித்து நீதிமன்றத்தில் தெரிவிப்போம். ஸ்டெர்லைட் ஆலை திறப்பதற்கும், செயல்படுவதற்கும் முழு காரணம் தி.மு.க. ஆட்சி தான். எனவே முழு பாறாங்கல்லை தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினும், தி.மு.க.வும் விழுங்கிவிட்டு ஏப்பம் விடுவது போலத் தான் இருக்கிறது. உண்மை நிலை நாட்டு மக்களுக்கு தெரியும்.

தூங்குபவர்களை எழுப்பிவிடலாம். ஆனால் தூங்குபவர்கள் போல பாசாங்கு செய்பவர்களை எழுப்ப முடியாது. ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு தமிழக அரசு போட்ட அரசாணை ஐ.நா. சபைக்கு சென்றாலும் செல்லும்.

தமிழகம் தொழில் தொடங்குவதற்கு உகந்த மாநிலமாக திகழ்கிறது. ஸ்டெர்லைட் ஆலையில் வேலை இழந்தவர்களுக்கு மாற்று வேலை வழங்கப்படுமா? என்பது குறித்து அரசு தான் முடிவு செய்யும். எம்.ஜி.ஆர். திரைப்படங்களில் சமூகத்துக்கு உகந்த நல்ல பல கருத்துக்களை சொல்லியிருக்கிறார். நல்ல சமுதாயத்தை உருவாக்கவேண்டும் என்ற அக்கறை எம்.ஜி.ஆரிடம் இருந்தது. இதனால் மக்கள் அவருக்கு அங்கீகாரம் கொடுத்தார்கள். அரியணையிலும் அமர வைத்தார்கள். எனவே மக்கள் தான் சினிமா நட்சத்திரங்கள் குறித்து முடிவு செய்வார்கள், நான் அல்ல.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com