

தூத்துக்குடி,
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளிவரும் கழிவுகளால் பாதிப்புகள் ஏற்படுகின்றன என கூறி அ. குமரெட்டியபுரம் உள்ளிட்ட 18 கிராம மக்கள் ஆலைக்கு எதிராக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு ஆலை எதிர்ப்பு அமைப்பினரும் ஆதரவு தெரிவித்தனர்.
தொடர்ந்து 100வது நாளன்று பெரிய அளவில் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் ஆட்சியர் அலுவலகம் நோக்கி நடந்த பேரணியானது வன்முறையாக வெடித்தது. இந்த சம்பவத்தில் கலகக்காரர்களை அடக்க போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். 150க்கும் மேற்பட்டோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
பின்னர் அவர்களில் முதலில் 65 பேரும், பின்பு 74 பேரும் விடுவிக்கப்பட்டனர். தொடர்ந்து தூத்துக்குடியில் நீடித்து வந்த பதற்றத்தினை தணிப்பதற்காக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் 144 தடை உத்தரவு இன்று முடிவுக்கு வந்தது.
இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில் 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட வாய்ப்பு இல்லை என ஆட்சியர் சந்தீப் நந்தூரி தகவல் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், வன்முறையில் காயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை அமைச்சர் கடம்பூர் ராஜு இன்று நேரில் சென்று சந்தித்து ஆறுதல் வழங்கினார். அதற்குமுன் வன்முறை சம்பவங்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அவர் பார்வையிட்டார்.