

சென்னை,
தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் எஸ். கீர்த்தனா, தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு தனது முதல் வெளிநாட்டு பயணமாக தென் கொரியாவுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டார். தமிழ்நாட்டிற்கு உலகளாவிய முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், ஹூண்டாய் ஹெவி இண்டஸ்ட்ரீஸ் நிறுவன அதிகாரிகளுடன் தூத்துக்குடியில் பிரம்மாண்ட கப்பல் கட்டும் தளம் அமைப்பது குறித்து ஆலோசனைகளை நடத்தினார்.
தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை செய்யுமாறு தென்கொரிய நிறுவனங்களுக்கு தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா அழைப்பு விடுத்து, உரிய வசதிகள் செய்து தரப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.
இந்த பயணத்தின் போது, தென்கொரியாவில் வசிக்கும் தமிழ் வம்சாவளி மக்களையும் சந்தித்து கலந்துரையாடினார். அது தொடர்பாக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தனது எக்ஸ் தள பதிவில் கூறியதாவது:-
தென் கொரியாவில் வாழும் தமிழ் வம்சாவளியினரை சந்தித்து, அவர்களின் ஊக்கமூட்டும் வாழ்க்கை பயணங்களையும் சாதனைகளையும் அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன். உலக அரங்கில் அவர்கள் படைத்து வரும் வெற்றிகள், தமிழர்களின் திறன், உழைப்பு மற்றும் மனவலிமையின் சிறந்த சான்றாக திகழ்கின்றன.
உலகளாவிய பொருளாதார சக்தியாக தமிழ்நாடு முன்னேறி வரும் இந்த வேளையில், முதலீடுகளை ஈர்ப்பதிலும், புதுமைகளை ஊக்குவிப்பதிலும், சர்வதேச உறவுகளை வலுப்படுத்துவதிலும் நமது உலக தமிழ் சமூகத்தின் பங்களிப்பு மிகவும் மதிப்புமிக்கதாகும். தமிழ்நாட்டின் வளர்ச்சி பயணத்தில் அவர்களின் பங்கு என்றும் முக்கியமானதாக இருக்கும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.