19 மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் மதுரையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்

19 மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியலை மதுரையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று வெளியிட்டார்.
19 மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் மதுரையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்
Published on

மதுரை,

மதுரை ராஜாஜி அரசு மருத்துவக்கல்லூரியில் தென்தமிழகத்தில் முதன்முறையாக அமைத்த எலும்பு வங்கியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று திறந்து வைத்தார்.

தமிழகத்தில் மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புக்கான மாணவர்களின் தரவரிசை பட்டியலையும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார். மதுரையில் மருத்துவ தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டதும் இதுவே முதல் முறை ஆகும். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக மருத்துவக்கல்லூரிகளில் 19 பிரிவுகளின் கீழ் பட்டப்படிப்பு படிப்பதற்காக 64 ஆயிரத்து 900 விண்ணப்பங்கள் வந்துள்ளன. தமிழக அரசு மருத்துவ கல்லூரிகளில் 2 ஆயிரத்து 676 இடங்களும், சுயநிதி கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் 13 ஆயிரத்து 832 இடங்களும் உள்ளன.

இன்று கவுன்சிலிங் தொடக்கம்

முதல் கட்டமாக மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுதாரர்கள் ஆகியோருக்கான மருத்துவ படிப்பு கவுன்சிலிங் 22-ந் தேதி (அதாவது இன்று) தொடங்குகிறது. அடுத்தபடியாக பொதுப்பிரிவினருக்கு கவுன்சிலிங் தொடங்கும்.

முதல்-அமைச்சர் காப்பீட்டு திட்டத்திற்கான வருமான வரம்பு ரூ.72 ஆயிரத்தில் இருந்து தற்போது ரூ.1 லட்சத்து 20 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. வருகிற ஜனவரி 11-ந் தேதியில் இருந்து இது நடைமுறைக்கு வர உள்ளது.

மதுபிரியர்களின் கோரிக்கை ஏற்பு

ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் உள்ள 4 சர்வதேச விமான நிலையங்களில் 12 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். கொரோனா பரிசோதனை நடைபெறுகிறது.

இதில் 98 பேருக்கு தொற்று அறிகுறி கண்டறியப்பட்டது. 13 மாதிரிகளுக்கு முடிவுகள் பெறப்பட்டதில் ஒருவருக்கு ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பும், 8 பேருக்கு டெல்டா வைரஸ் பாதிப்பும் இருப்பது தெரியவந்துள்ளது. மீதியுள்ள பரிசோதனை முடிவுகள் படிப்படியாக கிடைக்கும். தமிழகத்தில் 84 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசியும், 55.1 சதவீதம் பேர் 2 தவணை தடுப்பூசியும் போட்டு உள்ளனர். கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு ஆகியவை சனிக்கிழமை வருகிறது. எனவே பண்டிகை, அசைவ, மதுப்பிரியர்களின் கோரிக்கையை ஏற்று சனிக்கிழமை நடக்கும் மெகா தடுப்பூசி முகாம் மாற்றப்பட்டு அந்த வாரங்களில் ஞாயிற்றுக்கிழமை முகாம் நடைபெறும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com