ஒப்பந்த செவிலியர்கள் 169 பேருக்கு பணிநிரந்தர ஆணை - மா.சுப்பிரமணியன் வழங்கினார்

மீதமுள்ள 831 செவிலியர்களுக்கு வருகிற பொங்கல் விழாவிற்கு முன்பாக பணிநிரந்தர ஆணை வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (26.12.2025) சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள மருத்துவம் மற்றும் ஊரகநலப்பணிகள் இயக்ககத்தில், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் 169 செவிலியர்களுக்கு பணிநிரந்தர ஆணைகள் மற்றும் பணிமாறுதல் மூலம் 31 பணியாளர்களுக்கு பணிமாறுதல் ஆணைகளை வழங்கி, செவிலியர்களுக்கான பணிமூப்பு பட்டியலினை வெளியிட்டார். பிறகு அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-
169 செவிலியர்களுக்கு காலமுறை ஊதியத்திற்கான பணியாணைகள் இன்று வழங்கப்பட்டுள்ளது. இந்த அரசுப் பொறுப்பேற்றதற்கு பிறகு ஒப்பந்த செவிலியர்களுக்கு தொடர்ச்சியாக பணிநிரந்தரம் என்பது தமிழ்நாடு முதல்-அமைச்சரின் வழிகாட்டுதலோடு செய்யப்பட்டு வருகிறது. அதன்படி இன்று வரை 4,825 ஒப்பந்த செவிலியர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் மீதமிருக்கும் 8000த்திற்கும் மேற்பட்ட ஒப்பந்த செவிலியர்களை பணிநிரந்தரம் செய்யப்பட வேண்டும் என்கின்ற கோரிக்கை வலுப்பெற்று,
முதல்-அமைச்சரின் வழிகாட்டுதலோடு, விரைவில் 1000 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. அந்தவகையில் காலிப்பணியிடங்களாக இதுவரை கண்டறியப்பட்ட 169 பணியிடங்களும், செவிலியர் கண்காணிப்பாளர் நிலை-2, போதகர் போன்ற பணியிடங்களில் பதவி உயர்வு வழங்கப்பட்டு அதன் மூலம் 400 பணியிடங்களும், புதிதாக கட்டப்பட்டு வரும் தீவிர சிகிச்சை பிரிவு கட்டிடங்களுக்கு புதிய பணியிடங்கள் உருவாக்குவது என்கின்ற வகையிலும் சுமார் 1,000 செவிலியர்கள் பணியிடங்கள் உருவாக்கப்பட்டு விரைவில் ஒப்பந்த செவிலியர்களுக்கு பணிநிரந்தரம் ஆணை வழங்கப்பட உள்ளது.
இன்று 169 ஒப்பந்த செவிலியர்களுக்கு பணிநிரந்தர ஆணை வழங்கப்பட்டுள்ளது. மீதமிருக்கும் 831 ஒப்பந்த செவிலியர்களுக்கு விரைவில் பணிநிரந்தர ஆணைகள் வழங்கப்படவிருக்கிறது. அதோடு இன்று 15 மருத்துவ பதிவேடு நுட்புநர்கள், 10 இளநிலை உதவியாளர்கள், 6 தட்டச்சர்களுக்கு பதவி உயர்வுகள் மற்றும் பணிமாறுதல்கள் வெளிப்படைத்தன்மையுடன் நடைபெற்று அவர்களுக்கும் ஆணைகள் தரப்பட்டுள்ளது. ஆக இன்று 200 பேருக்கு ஆணைகள் தரப்பட்டுள்ளது.
MRB ஒப்பந்த செவிலியர்கள் முறை என்பது 2015ஆம் ஆண்டு அன்றைய அதிமுக அரசின் மூலம் உருவாக்கப்பட்ட திட்டம். MRB தேர்வு எழுதிய பிறகு 2 ஆண்டுகளுக்கு பிறகு அவர்கள் பணிநிரந்தரம் செய்யப்பட வேண்டும் என்பதில் மாறுபட்ட கருத்தில்லை என்றாலும் அவர்களுக்கு 2 வருடங்களுக்குப் பிறகு செவிலியர் காலிப்பணியிடங்கள் மற்றும் பணி மூப்பு அடிப்படையில் அவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அந்தவகையில் 2015 முதல் 2021 வரை 6 ஆண்டுகளில் 1,871 இடங்களை மட்டுமே அன்றைய அதிமுக அரசு நிரப்பியது.
ஆனால் இன்றைய தமிழ்நாடு முதல்-அமைச்சர் செவிலியர்கள் மேல் இருக்கும் அக்கறை காரணமாகவும், கோவிட் பேரிடர் காலங்களில் இவர்களின் அர்ப்பணிப்பு பணிகள் காரணமாகவும் அவர்களுக்கு தொடர்ச்சியாக 4,825 பணியிடங்களை நிரப்பியது மட்டுமல்லாமல் மீண்டும் 1,000 பணியிடங்களுக்கான பணிநிரந்தரம் செய்யப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள். அதில் முதற்கட்டமாக இன்று 169 பேருக்கு பணிநிரந்தர ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. தற்போது செவிலியர்களின் கோரிக்கையினை ஏற்று முன்னின்று போராட்டத்தினை முன்னெடுத்தது தமிழ்நாடு அரசு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம்.
இந்த சங்கத்தின் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கை என்பது, 724 பேர் ஏற்கெனவே கோவிட் காலத்தில் தற்காலிக அடிப்படையில் பணிபுரிந்தவர்கள். அவர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாணைகள் தரப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார்கள். அந்தவகையில் இந்த அரசுப் பொறுப்பேற்றதற்கு பிறகு 3,260 ஒப்பந்த செவிலியர்கள் பணியில் அமர்த்தப்பட்டார்கள்.
இந்த ஒப்பந்த அடிப்படையிலான செவிலியர் பணியிடங்களில் நிரப்புகின்ற பணியினை தமிழ்நாடு முதல்-அமைச்சர் வழிகாட்டுதலோடு, 2,146 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது. இந்தியாவில் வேறு எந்த மாநில அரசும் கொரோனா காலத்தில் பணியாற்றியவர்களை பணிநிரந்தரம் செய்தது இல்லை என்றாலும், தமிழ்நாடு அரசு 2,146 பேரை பணிநிரந்தரம் செய்துள்ளது. 724 பேர் பல்வேறு தொழில்நுட்ப காரணங்களினால் தற்காலிக பணியாளர்களாக சேர்க்கப்படாமல் இருந்தார்கள், சங்கங்களின் கோரிக்கையினை ஏற்று அவர்கள் தற்காலிக பணியாளர்களாக பணியமர்த்தப்படவுள்ளனர். 15,645 செவிலியர்களுக்கு பணிமூப்பு பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. 2004 ஆம் ஆண்டு தான் முதன்முதலில் பணிமூப்பு பட்டியல் வெளியிடப்பட்டது. தற்போது 21 ஆண்டுகள் கழித்து செவிலியர்களுக்கு பணிமூப்பு பட்டியல் வெளியிடப்பட்டது. மேலும் 4,000 பேர் பணிமூப்பு பட்டியலில் இணைக்க கால அவகாசம் தரப்பட்டுள்ளது.
சங்கத்தினர் வைத்த மற்றொரு கோரிக்கை மகப்பேறு காலத்தில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்படவேண்டும் என்பதாகும். அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு 1 வருட காலமாக அறிவிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. தற்போது MRB செவிலியர்களுக்கும் அத்தகைய மகப்பேறு விடுப்பு வழங்கும் வகையில் அரசாணை மிக விரைவில் வெளியிடப்படவுள்ளது. நீதிமன்ற உத்தரவின்படி இதற்கு முன்பு மகப்பேறு விடுப்பு எடுத்தவர்களுக்கும் நிலுவை தொகை வழங்கப்படவுள்ளது. தற்காலிக செவிலியர்களுக்கு மாத ஊதியம் ரூ.14,000 ஆக இருந்ததை தமிழ்நாடு முதல்-அமைச்சர் ரூ.18,000 ஆக உயர்த்தினார்கள்.
அப்படி வழங்கப்பட்டபோது 400க்கும் மேற்பட்டவர்கள் ஆவனங்கள் சரிபார்த்ததில் குறைபாடு இருந்ததால் வழங்கப்படாமல் இருந்தது. தற்போது அவர்களுக்கு நிலுவை தொகை வழங்கப்படவுள்ளது. தொழிலாளர்கள் மேல் அக்கரை கொண்ட இந்த அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் பேரிடர் காலங்களில் தங்கள் உயிரை துச்சமென மதித்து பணியாற்றியவர்களுக்கு இத்தகைய நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பொங்கலுக்கு முன்பு இந்த பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளோம் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்கள்.
தமிழ்நாடு செவிலியர் மேம்பாட்டு சங்கத்தின் பொருளாளர் ஹேமச்சந்திரன் தெரிவித்ததாவது:-
கடந்த காலங்களில் நமது சங்கத்தின் சார்பாக பல கோரிக்கைகளுடன் போராட்டங்களை நடத்தினோம். அந்த கோரிக்கைகள் நமது அமைச்சரும், துறை சார்ந்த அலுவலர்கள் நேரம் ஒதுக்கி நமது கோரிக்கைகளை முழுமையாக கேட்டு நமது கோரிக்கைகளை நிறைவேற்றி தரப்படும் என்று முடிந்த அளவு முயற்சி செய்து நமது கோரிக்கைகளை வெற்றி பெற செய்திருக்கிறார்கள்.
முதற்கட்டமான பணிநியமன ஆணை வழங்குவது என்பது மகிழ்ச்சியாக உள்ளது. கடந்த ஆட்சிக் காலங்களில் போராட்டங்கள் செய்தாலும் பேச்சுவார்த்தை என்கின்ற அடிப்படையில் நமது கோரிக்கைகளை காது கொடுத்து கேட்காத அளவிற்கு அரசாங்கமாக இருந்தது. இந்த அரசில் நமது கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலித்து நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு முதல்-அமைச்சருக்கும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருக்கும், அரசுத் துறை அலுவலர்களுக்கும் மிகவும் நன்றி கலந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் ப.செந்தில்குமார், தேசியநலவாழ்வு குழும இயக்குநர் அருண்தம்புராஜ், மருத்துவம் மற்றும் ஊரகநலப்பணிகள் இயக்குநர் சித்ரா, பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் சோமசுந்தரம், குடும்பநலத்துறை இயக்குநர் சத்யா, மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி கூடுதல் இயக்குநர் தேரணிராஜன், கூடுதல் இயக்குநர்கள் ராஜ்மோகன், திலகம் மற்றும் செவிலியர் சங்க நிர்வாகிகள், செவிலியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






