கன்னியாகுமரியில் ரூ.14.11 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கினார்

கன்னியாகுமரி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் அழகுமீனா தலைமையில் நாகர்கோவிலில் நடைபெற்றது.
டாக்டர் அம்பேத்கரின் நினைவு நாளையொட்டி, தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை வாலாஜாபேட்டை அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் நடைபெற்ற விழாவில் தமிழ்நாட்டிற்குட்பட்ட அனைத்து மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின்கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கும் பணியினை துவக்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மற்றும் பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா தலைமையில் நாகர்கோவில் தெ.தி.இந்து கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் கலந்து கொண்டு, ஆதிதிராவிட நலத்துறை சார்பில் 2,218 பயனாளிகளுக்கு ரூ.14.11 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
பின்னர் அவர் பேசியபோது, "மேலும் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் வீடுகள் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கலைஞரின் கனவு இல்லம் திட்டம், பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் வாயிலாக அனைத்து தரப்பட்ட மக்களுக்கும் வீடுகள் வழங்க வேண்டும் என்ற நோக்கில் நம்முடைய முதல்-அமைச்சர் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ மாணவியர்களுக்கு பல்வேறு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி கொடுத்து வருகிறார்.
மேலும் கல்லூரி மாணவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று மேல்படிப்பு படிப்பதற்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு அதிகளவு மாணவர்கள் பயன்பெற்று வருகிறார்கள். எனவே நீங்கள் அனைவரும் அரசின் திட்டங்களை தெரிந்து கொண்டு அத்திட்டங்களில் இணைந்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன். தொடர்ந்து ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்கு பல்வேறு திட்டங்களை தீட்டி நிதி ஒதுக்கீடு செய்து அவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்தி வரும் தமிழ்நாடு முதல்-அமைச்சருக்கு கன்னியாகுமரி மாவட்ட மக்கள் சார்பாக நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில உணவு ஆணையத்தலைவர் சுரேஷ்ராஜன், மாவட்ட வன அலுவலர் அன்பு, நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், நாகர்கோவில் மாநகராட்சி கமிஷனர் நிஷாந்த் கிருஷ்ணா, உதவி கலெக்டர் (பயிற்சி) ராகுல்குமார், நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் காளீஸ்வரி, கூட்டுறவுத்துறை இணை பதிவாளர் சிவகாமி, இணை இயக்குநர் வாணி (வேளாண்மை), துணை இயக்குநர்கள் நக்கீரன் (தோட்டக்கலை), கீதா (வேளாண் விற்பனை, வணிகம்), உதவி இயக்குனர்கள் அன்பு (ஊராட்சிகள்), பாண்டியராஜன் (பேரூராட்சிகள் (பொ)), மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மோகனா, தாட்கோ மேலாளர் தெய்வகுருவம்மா, மாவட்ட வழங்கல் அலுவலர் புஷ்பாதேவி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தினேஷ் சந்தரன், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) ஷேக் அப்துல்காதர், துணை மேயர் மேரி பிரின்சி லதா, முன்னோடி வங்கி மேலாளர் செல்வராஜ், தனி வட்டாட்சியர் (ஆதி திராவிடர்) திருவாழி, அரசு வழக்கறிஞர் மதியழகன், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






