

சென்னை,
அரசு தொழிற்பயிற்சி நிலைய பயிற்றுநர்களுக்கு பதவி உயர்வு ஆணைகளை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முகமது பர்வேஸ் வழங்கினார்.
பணியாளர்களின் பதவி உயர்வு தொடர்பான முடிவுகளை வெளிப்படையாகவும், நேர்மையாகவும் மேற்கொள்ளும் நோக்கில், அரசு முன்னெடுத்துள்ள வெளிப்படையான நிர்வாக நடைமுறைகளுக்கு இணங்க, பணியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையினை ஏற்று, தமிழ்நாடு முதல்-அமைச்சர் தலைமையிலான அரசால் இன்று வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்ககத்தில் தொழிற்பயிற்சி நிலையங்களில் பல்வேறு நிலைகளில் பணியாற்றும் பயிற்றுநர்களுக்கு முதுநிலையையும், விருப்பத்தையும் அடிப்படையாகக் கொண்டு, கணினி வழியாக கலந்தாய்வு மூலம் பதவி உயர்வு ஆணை வழங்கும் நிகழ்வு முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது.
இதன் மூலம், 136 இளநிலை பயிற்சி அலுவலர்கள் உதவி பயிற்சி அலுவலர்களாக பதவி உயர்வு பெற்றனர். பதவி உயர்வுக்கான ஆணைகள் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் முகமது பர்வேஸ் வழங்கினார்.
இந்நிகழ்வின்போது, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அரசு செயலாளர் வீரராகவ ராவ், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் பழனி, மற்றும் துறையின் உயர் அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.