சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் விடுவிப்பு ரத்து


சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் விடுவிப்பு ரத்து
x
தினத்தந்தி 25 April 2025 11:57 AM IST (Updated: 25 April 2025 12:35 PM IST)
t-max-icont-min-icon

கடலூர் நீதிமன்றம், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உள்பட 3 பேரையும் வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவு பிறப்பித்து இருந்தது.

சென்னை,

கடந்த 2006-2011ம் ஆண்டுகளில் அமைச்சராக பதவி வகித்த எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், மற்றும் அவரது மனைவி, மகன் மீது வருமானத்துக்கு அதிகமாக 3 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கை விசாரித்த கடலூர் நீதிமன்றம், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உள்பட 3 பேரையும் வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி பி.வேல்முருகன் முன்பாக நடந்தது. அப்போது லஞ்சஒழிப்புத் துறை தரப்பில் இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை மற்றும் குற்றப்பத்திரிகையை மேற்கோள்காட்டி குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருப்பதாகவும், அதை கீழமை நீதிமன்றம் கவனத்தில் கொள்ளத் தவறிவி்ட்டதாகவும் வாதிடப்பட்டது.

பதிலுக்கு எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தரப்பில் குடும்ப சொத்துக்களையும், அறக்கட்டளை சொத்துக்களையும் வருமானத்துக்கு அதிகமான சொத்து என லஞ்சஒழிப்புத் துறை தவறுதலாக கணக்கிட்டுள்ளது. இந்த வழக்கில் கடலூர் நீதிமன்றம் சரியான உத்தரவைத்தான் பிறப்பித்துள்ளது. எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.

இந்த நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியானது. அதில், சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் விடுவிப்பு ரத்து செய்யப்படுவதாக சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அத்துடன், குற்றச்சாட்டுகளை பதிவு செய்து 6 மாதங்களுக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் எனவும் போலீசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.

1 More update

Next Story