

தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ். வளாகத்தில், கொரோனா காலத்தில் பணியாற்றிய 668 செவிலியர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கி, அயலக மருத்துவ மாணவர்கள் மருத்துவப் பயிற்சிக்கான இணைய முகமை வெளியிட்டு பேசினார். அதன் பிறகு அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
668 ஒப்பந்த செவிலியர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்குதல்:
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையில் தமிழ்நாடு முதல்-அமைச்சரின் வழிகாட்டுதலோடு, தொடர்ச்சியாக பொதுமக்கள் நலனில் அக்கறை செலுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக கோவிட் காலங்களில் பணியாற்றிய செவிலியர்கள் அனைவரும் ஒருவர் கூட பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்து அவர்களுக்கு படிப்படியாக பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டு வருகிறது. கோவிட் காலத்தில் தற்காலிகமாக பணியில் சேர்ந்த செவிலியர்கள் யாருக்கும் இந்தியாவில் வேறு மாநிலங்களில் பணிநிரந்தரம் என்பதோ அல்லது அவர்களை அரசுப் பணியில் இணைத்துக் கொண்டது என்பதோ இதுவரை இல்லை. ஆனால் நமது தமிழ்நாடு முதல்-அமைச்சர் தற்காலிகமாக கோவிட் காலங்களில் பணியமர்த்தியவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்கின்ற வகையில், ஒருவர் கூட கோவிட் காலங்களில் பணியாற்றியவர்கள் விடுபட்டு விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்து ஏற்கெனவே அவர்களுக்கு சிறப்பு மதிப்பெண்களை வழங்கி, 708 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள், 50 ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் அவர்களை பணியில் அமர்த்தி கொண்டார்கள்.
அந்த வகையில் இன்று கோவிட் காலங்களில் தற்காலிகமாக பணியில் இணைந்தவர்கள் 2,814 பேர், இதில் 2,146 பேருக்கு ஏற்கெனவே மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் (MRB) மூலம் பணிநியமன ஆணை வழங்கப்பட்டது. மீதமிருந்த 719 பேருக்கு அவர்களுக்கான ஆவணங்கள் சமர்ப்பிப்பதற்கு நிறைய குளறுபடிகள் இருந்தது, அவர்களுக்கு MRB ஒப்பந்த பணிநியமன ஆணைகள் தர வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை இருந்து வந்தது. தமிழ்நாடு முதல்-அமைச்சர், அவர்களுக்கு பணிநியமன ஆணைகள் தர வேண்டும் என்று அறிவுறுத்தியதன் காரணமாக, அவர்களை தனித்தனியாக வரவழைத்து அவர்களுக்குரிய ஆவணங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டடு 668 பேருக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. மீதமிருக்கும் 59 பேருக்கான ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு அவர்களும் பணிநியமன ஆணைகள் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு மட்டுமல்லாமல் 2014-ம் ஆண்டு தொடங்கி தற்காலிக அடிப்படையில் பணியில் சேர்ந்தவர்களை இந்த அரசு படிப்படியாக அவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கி வருகிறது.
அந்தவகையில் 2014 முதல் 2021 முன்பு வரை 7 ஆண்டு காலத்தில் அதிமுக ஆட்சிக் காலத்தில் 1871 பேருக்கு தான் பணிநிரந்தர ஆணைகள் வழங்கப்பட்டது. ஆனால் நமது தமிழ்நாடு முதல்-அமைச்சர், திமுக தேர்தல் அறிக்கையில் சொன்னது போல அதனை முழுமையாக நிறைவேற்றிடும் வகையில் 5 ஆண்டு கால ஆட்சிக்காலத்தில் 5,825 ஒப்பந்த செவிலியர்கள் நிரந்தர பணி ஆணைகள் பெற்றிருக்கிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
அயலக மருத்துவ மாணவர்கள் மருத்துவப் பயிற்சிக்கான இணைய முகமை:
அதுமட்டுமல்லாமல் இன்று மற்றொரு நிகழ்வாக வெளிநாடுகளில் மருத்துவம் படிக்கும் மாணவர்கள் தமிழ்நாட்டில் internship பயிற்சி படிக்க வேண்டும் என்றால் ரூ.3 லட்சம் வரை தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தில் கட்டி பயில வேண்டும். அதுவும்கூட விண்ணப்பங்களை வழங்கி எங்கு காலியாக இருக்கிறதோ அந்த மருத்துவமனைகளில் தான் பயிற்சி பெற வேண்டும் என்கின்ற நிலை இருந்தது. தமிழக முதல்-அமைச்சர், அயலக மருத்துவ மாணவர்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு மிகப் பெரிய அளவில் சலுகை தருகின்ற வகையில், இந்த அரசுப் பொறுப்பேற்றதற்கு பிறகு தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப்பல்கலைக்கழகத்தில் கட்டி வந்த ரூ.3 லட்சம் மொத்தமாக இரத்து செய்து விட்டார்கள்.
அதோடு மட்டுமல்லாமல் அந்த மாணவர்களுக்கு பயிற்சி மேற்கொள்ளும் காலக்கட்டத்தில் மாதத்திற்கு ரூ.25,000 பயிற்சி நிதியாக வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அயலக மருத்துவ மாணவர்கள் ஏற்கெனவே மிகப் பெரிய அளவில் பயன்பெற்று வருகிறார்கள். இருந்தாலும் அவர்கள் இந்தப் பயிற்சி மேற்கொள்ள தொடர்ந்து காலிப்பணியிடங்களை நோக்கி அலைய வேண்டி உள்ளது. அவர்களுடைய அலைச்சலை குறைப்பதற்கு மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் (DME) சார்பில் புதிய இணைய முகமை இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இம்மாணவர்கள் இந்த இணையதளத்தில் சென்று எந்த மருத்துவக்கல்லூரிகளில் இடம் காலியாக இருக்கின்றது என்கின்ற விவரம் தெரிந்து அவர்களே விண்ணப்பித்து அதற்கான ஆணைகளை பெற்றுக் கொள்ளலாம். அதற்கான இணைய முகமை இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
திட்டங்கள் மருத்துவ கட்டமைப்புகள்:
இந்த அரசு பொறுப்பேற்றதற்கு பிறகு 708 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் புதிதாக கட்டி திறந்து வைக்கப்பட்டுள்ளது. புதிதாக 19 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் கட்டி பல இடங்களில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளுக்கு இணையான மருத்துவமனைகள் 5 இடங்களில் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. 50 இடங்களில் புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கான அனுமதியினை பெற்று திறந்து வைத்திருக்கிறோம். கடந்த சில தினங்களுக்கு முன்பாக 642 துணை சுகாதார நிலையங்கள் திறந்து வைத்திருக்கிறோம்.
அதோடு இத்துறையில் செயல்படுத்தப்பட்டுள்ள சிறப்பு திட்டங்கள் மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் நம்மைக்காக்கும் 48, கலைஞரின் வருமுன் காப்போம், இதயம் காப்போம், பாதம் பாதுகாப்போம், சிறுநீரக பாதுகாப்பு திட்டம், மக்களைத் தேடி மருத்துவ ஆய்வக திட்டம், தொழிலாளர்களை தேடி மருத்துவ ஆய்வக திட்டம், செயற்கை கருத்தரித்தல் மையம், நலம் காக்கும் ஸ்டாலின், அதேபோல் புதிய மருத்துவக் கட்டமைப்புகள் என்று எடுத்துக்கொண்டால் சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை, தேசிய முதியோர் நல மருத்துவமனை, குழந்தைகளுக்கான பிரத்யேக மருத்துவமனை, 14 வயதுடைய பெண்களுக்கு HPV என்று சொல்லக்கூடிய புற்றுநோய் தடுப்பூசி செலுத்துவது போன்று திராவிட மாடல் ஆட்சியில் சுகாதாரத்துறையின் சாதனைகளை சொல்லிக்கொண்டே போகலாம்.
இவ்வாறு அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ப.செந்தில்குமார், மருத்துவம் மற்றும் ஊரகநலப்பணிகள் இயக்குநர் சித்ரா, மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் சுகந்தி ராஜகுமாரி, பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் சோமசுந்தரம், கூடுதல் இயக்குநர்கள் ராஜ்மோகன், திலகம் மற்றும் மருத்துவப் பேராசிரியர்கள், உயரலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.