

சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
தமிழ்நாடு முதல்-அமைச்சரின் அறிவுறுத்தலின்படி, இன்று (03.06.2026) ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த் செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் மற்றும் திருக்கழுகுன்றம் வட்டங்களில் கோவளம் உப வடிநிலப் பகுதிகளில் ரூபாய் 342.60 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய குடிநீர் நீர்த்தேக்கம் தொடர்பான பணிகளை நேரில் ஆய்வு செய்தார்.
இந்த நீர்த்தேக்கத்தின் வாயிலாக நாளொன்றுக்கு 170 மில்லியன் லிட்டர் குடிநீரை சென்னைக்கு வழங்க முடியும். நீர்த்தேக்கத்தைச் சுற்றி 34 கி.மீ நீளத்திற்கு மண் கரை அமைப்பது மற்றும் நீர் ஒழுங்கிகள் அமைத்து வெள்ள நீரை முறைப்படுத்துதல் ஆகிய பணிகள் தற்போது நடைபெற்று வரக்கூடிய நிலையில், பணிகளின் தரத்தில் எவ்வித சமரசமின்றி, திட்டத்தை நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் வகையில் மிகத் துரிதமாக முடிக்க வேண்டும் என்று துறை சார்ந்த அலுவலர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் எம்.வீரப்பன், திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் விஜயராஜ், நீர்வளத்துறை முதன்மைத் தலைமைப் பொறியாளர் எஸ்.கோபாலகிருஷ்ணன், சென்னை மண்டலத் தலைமைப் பொறியாளர் சி.பொதுப்பணித்திலகம், செங்கல்பட்டு மாவட்ட வருவாய் அலுவலர் எம்.கணேஷ் குமார், நீர்வளத்துறை கண்காணிப்புப் பொறியாளர் கே.செல்வ குமார், திட்ட இயக்குநர் ஶ்ரீதேவி, நீர்வளத்துறை மற்றும் வருவாய்த்துறையைச் சேர்ந்த இதர உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.