

சென்னை,
கடந்த 2 தினங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக சென்னை திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட அரவிந்த்நகர், ஏழுமலைநகர் உள்ளிட்ட பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. அப்பகுதியில் முழங்கால் அளவு மழைநீர் தேங்கி இருப்பதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நகராட்சி அதிகாரிகளிடம் பொதுமக்கள் தெரிவித்த நிலையில், மழைநீரை வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் மழை பாதித்த பகுதிகளில் அமைச்சர் நாசர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
முழங்கால் அளவு தண்ணீரில் இறங்கி, வீடு வீடாக சென்று அங்குள்ள மக்களிடம் மழை பாதிப்பு குறித்து குறைகளை கேட்டறிந்தார். மேலும் மழைநீர் தேங்கி நிற்பதற்கான காரணம் என்ன, அதை அகற்றுவதற்கு மேற்கொள்ளப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்த அவர், மழைநீர் கூடிய விரைவில் அகற்றப்படும் என பொதுமக்களிடம் உறுதியளித்தார்.