ஒரு யூனிட் மின்சாரம் ரூ.35க்கு கொள்முதல் செய்வது குறித்து அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்

சென்னையில் பல மணி நேரம் மின்வெட்டு என்பது தவறான செய்தி என அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார்.
ஒரு யூனிட் மின்சாரம் ரூ.35க்கு கொள்முதல் செய்வது குறித்து அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்
Published on: 

சென்னை,

மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;

மழையால் மின் தேவை குறைவு

தற்போது பெய்துவரும் மழை காரணமாக மின் தேவை குறைந்துள்ளது. மின் தேவை குறைந்ததால் அதிக விலைக்கு மின்சாரம் வாங்குவது குறைக்கப்பட்டுள்ளது. நேற்றை விட இன்று 1000 மெகாவாட் மின் தேவை குறைந்துள்ளது. மின் தேவை குறைந்துள்ளதால் பீக் அவர்சில் 300 மெகாவாட் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. பீக் அவர்சில் 300 மெகாவாட் மட்டுமே, யூனிட் ரூ.35க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. கேஸ் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை மட்டுமே ஒரு யூனிட் ரூ.35க்கு கொள்முதல் செய்கிறோம். மின்சார கொள்முதலுக்கும், மின்சார கட்டணத்துக்கும் சம்பந்தம் இல்லை. அதிக விலைக்கு கொள்முதல் செய்தாலும், மின்சார கட்டணம் உயராது.

மின்சாரம் நிறுத்தம் இல்லை

சென்னையில் பலமணி நேரம் மின்வெட்டு என்பது தவறான செய்தி. தலைமை செயலத்தில் மின்சாரம் இல்லை என தவறாக செய்தி பரப்புகின்றனர். அரைமணி நேரம் பாதிப்பு ஏற்பட்டது. உடனடியாக சரிசெய்யப்பட்டது. தமிழ்நாட்டில் எங்கும் மின்சாரம் நிறுத்தம் இல்லை. அனல்மின் உற்பத்தியை மேலும் அதிகரிக்க போர்க்கல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் பாதிக்கப்பட்ட 2 அலகுகளை சரி செய்து மீண்டும் விரைவில் மின் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படு வருகிறது.

மின் இணைப்பு

புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கு நிபந்தனையுடன் மின் இணைப்பு வழங்கப்படும். புறம்போக்கு நிலங்களில் 250 சதுர அடிக்கு கீழே உள்ள வீடுகளுக்கு மட்டும் சிங்கிள் பேஸ் மின் இணைப்பு வழங்கப்படும். மேய்க்கால் புறம்போக்கு நீர்நிலை புறம்போக்குகள், ரெயில்வே இடங்களில் வசிப்போருக்கு மின் இணைப்பு வழங்கப்படாது.”

இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com