ஜெம் வீரமணி மீதான வழக்கை முடிக்க திமுக ஆட்சியில் பல நூறு கோடி ரூபாய் பேரம்-அமைச்சர் நிர்மல்குமார் குற்றச்சாட்டு

ஜெம் வீரமணி மீதான வழக்கை முடிப்பதற்கு தி.மு.க. ஆட்சியில் பல நூறு கோடி ரூபாய் பேரம் நடைபெற்றுள்ளது என மதுரையில் அமைச்சர் நிர்மல்குமார் பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார்.
நிர்மல்குமார்
Published on: 

ஜெம் வீரமணி வழக்கு

மதுரையில் அமைச்சர் நிர்மல்குமார் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-ஜெம் வீரமணி வழக்கை தி.மு.க. அரசு கையாண்ட விதம் தவறானது. இந்த விவகாரத்தில் தி.மு.க. அதிகமாக எதிர்வினையாற்றுவதால் அந்த வழக்கில் ஏதோ தவறு இருப்பதை காட்டுகிறது. தி.மு.க.வினர் வீரமணியை காப்பாற்ற நினைக்கின்றனர். வீடியோவில் போதிய ஆதாரம் இல்லை என முன்னாள் அமைச்சர் ரகுபதி செல்கிறார். இது சாதாரணமாக கடந்து செல்லும் விஷயமல்ல. 2024-ம் ஆண்டு வீரமணிக்கு எதிராக அளித்த புகார், அப்போதைய போலீஸ் கமிஷனருக்கு சென்றது. அதுகுறித்து முதல்-அமைச்சருக்கும் சென்றிருக்கும். வீரமணியிடம் பலர் பேரம் பேசி பணம் பறித்ததாக குற்றச்சாட்டு உள்ளது. இவ்வளவு பிரச்சினை இருந்தபோது அப்போதைய முதல்-அமைச்சர் என்ன செய்து கொண்டிருந்தார்? எந்த உத்தரவை பிறப்பித்தார்?

பல நூறு கோடி பேரம்

போதிய ஆதாரமில்லை என வழக்கை முடித்தார்கள். அப்படி என்றால் போதுமான பேரம் முடிந்து விட்டது என்று அர்த்தமா?. ஒன்றரை ஆண்டுகளாக இந்த பிரச்சினை திரை மறைவில் நடந்தது. இப்படி மோசமான குற்றத்தை செய்தவர்கள், அதற்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.கடந்த ஆட்சி காலத்தில் ஜெம் வீரமணி மீதான வழக்கை சாதாரணமாக மூடியிருக்கிறார்கள். இதற்காக பல நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் பேரம் நடைபெற்றுள்ளது.

விசுவாசிகள் யாரும் இல்லை

இடைத்தேர்தலில் போட்டியிடுபவர்கள் எதற்காக அ.தி.மு.க.வில் இருந்து வெளியே வந்தார்கள்? தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் சேர்ந்து ஆட்சி அமைக்க முயற்சித்ததுதான் அதற்கு காரணம்.இப்போது இருப்பது எடப்பாடி பழனிசாமியின் அ.தி.மு.க. ஆகும். அதில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் விசுவாசிகள் யாரும் இல்லை. இதேபோல் தான் தி.மு.க.வும் மாறும்.அண்ணா, கருணாநிதி கால தி.மு.க. இன்று இல்லை. மு.க.ஸ்டாலினை நம்ப முடியாமல் அக்கட்சியினர் உள்ளனர். அடுத்த தேர்தலில் மு.க.ஸ்டாலின், உதயநிதியை நம்பி வாக்கு கேட்க முடியுமா?தி.மு.க.வின் நன்மதிப்பு இவர்களால் குறைந்துவிட்டது. தி.மு.க. இன்னும் 2 ஆண்டுகளில் அ.தி.மு.க. நிலைமைக்கு வரும்.வக்பு விஷயத்தில் சுப்ரீம் கோர்ட்டு சென்றது த.வெ.க.தான். பரந்தூர் விமான நிலைய திட்டத்தை ரத்து செய்தோம். பா.ஜனதாவை கொள்கை எதிரி என்று அறிவித்த ஒரே தலைவர் விஜய்தான்.இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com