

மதுரை,
மதுரை விமான நிலையத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் நிருபர்களிடம் கூறியதாவது:-
அரசு பள்ளிகளில் வழங்கப்பட்ட புத்தகப்பைகள் சாலையில் வீசப்பட்டது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டேன். அந்த குறிப்பிட்ட பள்ளிக்கூடத்தில் ஏற்கனவே அந்த குழந்தைகளுக்கு பெற்றோர் புத்தகப்பை வாங்கி கொடுத்து இருக்கிறார்கள். அதனால்தான் அந்த குழந்தைகள் வீட்டுக்கு போகும்போது விளையாட்டாக தூக்கி எறிந்து இருக்கிறார்கள்.
இதை சிலர் புகைப்படம், வீடியோ எடுத்து இருக்கிறார்கள். சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர் அந்தப்பையை எடுத்து வைத்தி ருக்கிறார். எவ்வளவோ ஏழை குழந்தைகள் இருக்கிறார்கள். உரிய முறையில் மற்ற குழந்தைகளுக்கு அது கொண்டு சேர்க்கப்பட்டது.
தி.மு.க. தயவில்தான் ஆட்சி நடைபெறுகிறது என மு.க.ஸ்டாலின் கூறி இருக்கிறார். ஒரு மூத்த அரசியல் தலைவர் அப்படி கூறியிருக்க வேண்டாம். வன்னியரசுக்கு அமைச்சரவையில் இடம் கிடைத்திருப்பது தனிப்பட்ட மனிதருக்கானது இல்லை. நீண்ட காலமாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அங்கீகாரம். இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் அமைச்சரவையில் இடம் பெற்றிருப்பது குரலற்றவர்களுக்கு குரலாக இருப்பதற்கான அடையாளம்.
கடந்த காலங்களில் கூட்டணி என்ற பெயரில் அவர்கள் முதுகில் ஏறி சவாரி செய்துவிட்டு வாக்குகளை மட்டும் வாங்கிவிட்டு அவர்களுக்கான அங்கீகாரத்தை தராமல் இருந்தார்கள். முதல்முறையாக தமிழக அரசியலில் முதல்-அமைச்சர் விஜய் அதை நிறைவேற்றி காட்டி இருக்கிறார். சட்டமன்றத்தில் நீட் தேர்வு ரத்து மசோதா உள்ளிட்ட இன்னும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றுவதற்கான ஆலோசனைகள் நடைபெறுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.