10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை - அமைச்சர் ராஜ்மோகன் வழங்கினார்

மொத்தம் 2,090 பேருக்கு ரூ.72.03 லட்சம் மதிப்பில் கல்வி ஊக்கத்தொகையினை பள்ளிக்கல்வி துறை அமைச்சர் ராஜ்மோகன் இன்று வழங்கினார்.
 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை - அமைச்சர் ராஜ்மோகன் வழங்கினார்
Published on

சென்னை,

10 மற்றும் 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் சென்னை பள்ளிகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் மற்றும் உறுதுணையாக இருந்த தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் என மொத்தம் 2,090 பேருக்கு ரூ.72.03 லட்சம் மதிப்பில் கல்வி ஊக்கத்தொகையினை பள்ளிக்கல்வி துறை அமைச்சர் ராஜ்மோகன் இன்று வழங்கினார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

ரிப்பன் கட்டட வளாகம் அம்மா மாளிகை கூட்டரங்கில் மேயர் பிரியா தலைமையில் இன்று நடைபெற்ற விழாவில் பெருநகர சென்னை மாநகராட்சியின் கீழ் இயங்கும் சென்னை பள்ளிகளில் 10 மற்றும் 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 1,085 மாணவ, மாணவியர் மற்றும் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற உறுதுணையாக இருந்த 1,005 தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் என மொத்தம் 2,090 பேருக்கு கல்வி உதவித் தொகையினை பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகன் வழங்கிப் பாராட்டினார்.

பெருநகர சென்னை மாநகராட்சியின் கீழ் 206 தொடக்கப்பள்ளிகள், 130 நடுநிலைப் பள்ளிகள், 46 உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் 35 மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 417 பள்ளிகள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இப்பள்ளிகளில் 1,08,178 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

இதில் 46 உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் 35 சென்னை மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 81 சென்னை பள்ளிகளில் 2025-26-ம் கல்வியாண்டில் 10-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 22 பள்ளிகள், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 2 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 24 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன. இந்த 24 பள்ளிகளுக்கு தலா ரூபாய் ஒரு லட்சம் வீதம், கல்வி ஊக்கத்தொகையினையும், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டில் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்திய 34 பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு முதல் பரிசாக ரூ.5,000/-, இரண்டாம் பரிசாக ரூ.3,000/-, மூன்றாம் பரிசாக ரூ2,000/-ம்,

12-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 600-க்கு 500 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற 293 மாணவர்களுக்கு தலா ரூ.1,500 வீதமும், பாடங்களில் 100/100 மதிப்பெண் பெற்ற 30 மாணவர்களுக்கு தலா ரூ.10,000 வீதமும், பாடவாரியாக 100% தேர்ச்சி அளித்த 391 ஆசிரியர்களுக்கு தலா ரூ.3,000 வீதமும், மாணவர்கள் பாடங்களில் 100/100 மதிப்பெண் பெற உறுதுணையாக இருந்த 30 ஆசிரியர்களுக்கு தலா ரூ.1,500 வீதமும் ரொக்கப்பரிசினையும்,

10-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 500-க்கு 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற 749 மாணவர்களுக்கு தலா ரூ.1,500 வீதமும், பாடங்களில் 100/100 மதிப்பெண் பெற்ற 13 மாணவர்களுக்கு தலா ரூ.1,000 வீதமும், பாடவாரியாக 100% தேர்ச்சி அளித்த 513 ஆசிரியர்களுக்கு தலா ரூ.3,000 வீதமும், மாணவர்கள் பாடங்களில் 100/100 மதிப்பெண் பெற உறுதுணையாக இருந்த 13 ஆசிரியர்களுக்கு தலா ரூ.1,500 வீதமும் என மொத்தம் 2,090 மாணவர்கள், தலைமையாசிரியர்கள், ஆசியர்களுக்கு ரூ.72.03 லட்சம் மதிப்பில் கல்வி ஊக்கத்தொகையினை அமைச்சர் ராஜ்மோகன் வழங்கிப் பாராட்டினார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com