பொங்கல் பரிசு தொகுப்பில் ஊழல் புகாருக்கு அமைச்சர் பதில்

பொங்கல் பரிசு தொகுப்பில் ஊழல் என கூறிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழக அமைச்சர் பதிலளித்து உள்ளார்.
பொங்கல் பரிசு தொகுப்பில் ஊழல் புகாருக்கு அமைச்சர் பதில்
Published on

சென்னை,

தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு இன்று அளித்த பேட்டியில், தமிழகத்தில் தற்போது ஆட்சி பொறுப்பில் இருந்து வரும் தி.மு.க. அரசு பொறுப்பேற்ற நாளிலிருந்து அ.தி.மு.க.வின் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளை பழிவாங்கும் நோக்கிலேயே செயல்பட்டு வருகிறது.

தேர்தல் நேரத்தில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியதையும் அண்மையில் தி.மு.க. அரசால் கொண்டுவரப்பட்ட திட்டங்களில் நடைபெற்றுவரும் ஊழல்களை மறைக்கும் விதமாக இந்த பழிவாங்கும் நடவடிக்கையை அரசு கையாண்டு வருகிறது.

குறிப்பாக அண்மையில் நியாய விலைக் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு 21 வகையான பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவதாக தி.மு.க. அரசு அறிவித்திருந்தது. ஏன் பெரும்பாலான குடும்ப அட்டைதாரர்களுக்கு அரசு அறிவித்த அனைத்து பொருட்களும் சென்றடையவில்லை.

அதே போல நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பில் இடம்பெற்ற பொருட்களின் அளவு குறைந்தும் தரமற்றதாகவும் வினியோகிக்கப்பட்டது.

பொங்கல் பரிசு வழங்கபடும் கரும்பிற்கு ரூபாய் 33 விலை நிர்ணயம் செய்து அரசு அறிவித்த போதும் விவசாயிகளுக்கு 16 ரூபாய் மட்டுமே கிடைத்தது என பல விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.

சுமார் 1300 கோடி ரூபாய் மதிப்பில் பொங்கல் தொகுப்பில் இடம்பெற்ற பொருட்கள் கொள்முதல் செய்ய நிதி ஒதுக்கப்பட்டு இருந்த போதும் சுமார் 500 கோடி மதிப்பில் மட்டுமே பொங்கல் பரிசு வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது என கூறினார்.

இந்த நிலையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியதற்கு தமிழக உணவு துறை அமைச்சர் சக்கரபாணி பதிலளித்து உள்ளார்.

அவர் கூறும்போது, பொங்கல் பரிசு தொகுப்பில் ஊழல் என்றும் தரமற்ற பொருள் வாங்கப்பட்டு உள்ளது எனவும் எடப்பாடி பழனிசாமி கூறுவது முழுவதும் பொய்.

குறுகிய காலத்தில் 2.5 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு 21 வகையான பொருட்கள் தரமாக வழங்க உரிய விலை புள்ளி கோரப்பட்டது. வெளிப்படையான டெண்டரால் ஒரு கொள்முதலில் ரூ.74.75 கோடி மீதப்படுத்தப்பட்டு உள்ளது என கூறியுள்ளார்.

ஆனால், ஆதாரமற்ற குற்றச்சாட்டை எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். அவர் என்னுடன் விவாதிக்க தயாரா? என கேள்வியும் எழுப்பியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com