

சென்னை,
வடகிழக்கு பருவமழையையொட்டி மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் சென்னை சேப்பாக்கம் எழிலக வளாகத்தில் உள்ள அவசர கட்டுப்பாட்டு மையத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் செயலாளர் டாக்டர் சந்தரமோகன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
வருவாய் நிர்வாக இணை கமிஷனர் லட்சுமி, பேரிடர் மேலாண்மை துறை இணை இயக்குனர் பெ.குமாரவேல் பாண்டியன் உள்பட உதவி கமிஷனர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
இந்த கூட்டத்துக்கு பின்னர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கடந்த கால மழைக்கால அனுபவங்களை அடிப்படையாக கொண்டு, அக்டோபர் மாதம் தொடங்க உள்ள வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் மனித உயிர்களையும், உடைமைகளையும், கால்நடைகளையும் பாதுகாக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அரசு எடுத்து வருகிறது. கடந்த காலங்களில் ஏற்கனவே பாதிப்புக்கு உள்ளான பகுதிகள் அடையாளம் காணப்பட்டு, வரைபடங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
பாதிக்கப்படுபவர்கள் மீட்பு முகாம்களில் உடனடியாக தங்கவைப்பதற்கு இது உதவிகரமாக இருக்கும். மத்திய அரசின் தேசிய பேரிடர் மேலாண்மை மீட்புகுழுவினர், ராணுவத்தினர் ஆகியோரை தயார் நிலையில் வைத்திருக்கக்கூடிய நிலையில் ஆய்வுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. வடகிழக்கு பருவமழை மூலம் இந்த ஆண்டு சராசரியாக 48 சதவீதம் நீர், குடிநீர் மற்றும் விவசாயத்துக்காக கிடைக் கும்.
4,339 பாதிப்புக்குள்ளாகும் பகுதிகள்
மாவட்டங்கள் வாரியாக பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடத்தி, பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகளில் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலெக்டர்களிடம் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மிக அதிகம் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகள் 578, அதிகம் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகள் 892, மிதமான பாதிப்புக்குள்ளாகும் பகுதிகள் 1,206, குறைந்த பாதிப்புக்குள்ளாகும் பகுதிகள் 1,723 என தமிழகத்தில் மொத்தம் 4 ஆயிரத்து 339 பாதிப்புக்குள்ளாகும் பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளுக்கு குறைந்தது 10 நபர்கள் வீதம் 6 ஆயிரத்து 740 பெண்கள் உள்பட முதன்மை மீட்பாளர்கள் 23 ஆயிரத்து 325 பேர் நிறுத்தப்பட உள்ளனர். பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் உள்ள 27 ஆயிரத்து 910 சிறுபாலங்கள் மற்றும் பாதிப்பற்ற பகுதிகளில் உள்ள 1 லட்சத்து 9 ஆயிரத்து 354 சிறுபாலங்கள் என ஆக மொத்தம் 1 லட்சத்து 37 ஆயிரத்து 264 சிறு பாலங்களில் அடைப்புகள் அகற்றப்பட்டுள்ளன. பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் உள்ள 1,142 பெரிய பாலங்கள் மற்றும் பாதிப்பற்ற பகுதிகளில் உள்ள 8 ஆயிரத்து 497 பெரிய பாலங்கள் என மொத்தம் 9 ஆயிரத்து 639 பெரிய பாலங்களில் அடைப்புகள் அகற்றப்பட்டுள்ளன.
எதிர்கொள்ள தயார்
இதுதவிர தமிழகத்தில் உள்ள 43 ஆயிரத்து 821 நீர்நிலைகளில், 23 ஆயிரத்து 132 நீர்நிலைகளில் தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டு, 4 கோடியே 43 லட்சத்து 9 ஆயிரத்து 437 கன மீட்டர் அளவில் வண்டல் மண் எடுக்கப்பட்டு 4 லட்சத்து 59 ஆயிரத்து 355 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் 43 ஆயிரத்து 945 ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகளில் கண்டறியப்பட்டு, அதில் 19 ஆயிரத்து 492 நீர் நிலைகளில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டுள்ளது.
நீர்வழித்தடங்களில் 525 கி.மீ. தூரம் வரை ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டுள்ளது. பேரிடருக்கு முந்தைய காலம், பேரிடர் காலம் மற்றும் பேரிடருக்கு பிந்தைய காலம் என 3 பிரிவுகளாக பிரித்து எங்களை தயார்படுத்தியுள்ளோம். ஆகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் எல்லா வகைகளிலும் வடகிழக்கு பருவமழை நமக்கு தேவை எனும் நிலையில், அதனை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.